Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள், களத்தில் இருப்பது யார்?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
Vikravandi By-Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 14ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
வேட்புமனுதாக்கல் செய்ய கடைசிநாள்:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வரும் ஜுலை 10ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து, பதிவான வாக்குகள் ஜுலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. அதனை முன்னிட்டு தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், இன்று சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் யார்?
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன் காரணமாக தற்போது திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே அங்கு மும்முனைப்போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி. அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுபோக சில சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுவரையில் 24 பேர்:
வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 5 வேட்பாளர்களும், இரண்டாவது நாளில் ஒருவரும், மூன்றாவது நாளில் ஒருவரும், நான்காவது10 பேரும் என மொத்தம் 17 வேட்பாளர்கள் 20 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஐந்தாவது நாளான நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளரான டாக்டர் அபிநயா, அவருக்கு மாற்று வேட்பாளராக அன்னியூரை சேர்ந்த கலைச்செல்வி, தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான ராஜமாணிக்கம், யுனைடெட் ரிபப்ளிக்கன் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் வேட்பாளரான சேகர், தேசிய சமூக நீதிக்கட்சி வேட்பாளரான ஜனார்த்தனன், சுயேச்சை வேட்பாளர்களாக செல்வி, விநாயகம் ஆகிய 7 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதுவரை இத்தொகுதியில் 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்:
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வேட்புமனுதாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில், அவை வரும் 24ம் தேதி பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். 26ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.