TN Rain Alert: சில்லென்ற வானிலை.. சென்னையில் பதிவான மழை. இன்றைய வானிலை எப்படி இருக்கும்?
சென்னையில் இன்று காலை பல்வேறு பகுதிகளில் லேசான மழை பதிவானது.
சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, பசுமைவழிச் சாலை, அடையாறு, ஆர்.ஏ புரம், எம்.ஆர்.சி நகர், பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக அதிகனமழை பதிவானது. ஒரே நாளில் சுமார் 40 செ.மீ அளவு மழை பதிவானது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. ஏரிகள் அனைத்தும் நிரம்பியது. 2015 ஆம் ஆண்டு வெள்ளம் வந்த போது ஏறபட்ட பாதிப்புகளை விட கடந்த ஆண்டு பாதிப்புகள் அதிமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து மழை படிப்படியாக குறைந்தது. மழை பெய்தால் அய்யோ என்று கூறும் அளவு டிசம்பர் மாத மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் மார்கழி மாதம் தொடங்கி நடைபெற்று வருவதால் அதிகாலை நேரங்களில் சென்னையில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. உதகையில் உரைப்பனி தோன்றுகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகம் காணப்பட்டது. இந்த சூழலில் இன்று காலை சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பதிவானது. வங்கக்கடலில் இருக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாக இது இருக்கலாம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் 5 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
6 ஆம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள் :
இன்று, இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
03.01.2024 மற்றும் 04.01.2024: லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
05.01.2024: மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
06.01.2024: மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.