பிரசவத்திற்கு துடித்த பெண்... டோலி கட்டி 6 கி.மீ., சுமந்து சென்ற கிராமம்... பிரசவ வலியில் துடிக்கும் மலைகிராமங்கள்!
டோலிகட்டி தோலில் காட்டுக்குள் 6 கிலோ மீட்டர் தூக்கிச்செல்லப்பட்ட நிறைமாத கர்பிணி. சாலைக்காக ஏங்கும் மலை கிராம மக்கள்.
வேலூர் மாவட்டம் அணைகட்டு தொகுதிக்குட்பட்ட பகுதியில் பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, அல்லேரி, குருமலை, பாலாம்பட்டு, நெக்கினி கொலையம் உள்ளிட்ட சுமார் 25-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பீஞ்சமந்தை மலை கிராம ஊராட்சிக்குட்பட்ட அல்லேரி அடுத்த ஜடையன்கொல்லை பகுதியை சேர்ந்தவர்கள் ரஞ்சித்-அனிதா (24) தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆனா நிலையில் அனிதா முதல் முறையாக கருவுற்றார். நிறைமாத கர்பிணியான அனித்தாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
பீஞ்சமந்தையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கர்ப்பிணி அனிதாவை கொண்டு செல்ல ஊர் மக்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் பிரசவ வலி அதிகமானதாலும், ஜடையன்கொல்லையில் இருந்து பீஞ்சமந்தைக்கு செல்ல வனத்திற்க்குள் முறையான பாதை இல்லாததாலும் மாற்று வழியாக 6 கிலோ மீட்டர் உள்ள ஒத்தையடி பாதையை கடந்து, அத்தியூர் ஊராட்சி கலங்குமேடு பகுதிக்கு சென்று, அங்கிருந்து ஆம்புலென்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லலாம் என முடிவெடுத்தனர். கிராம மக்கள் சற்றும் தயங்காமல் ஒரு மரக்கம்பு மூலம் போர்வையில் டோலி கட்டி அதில் நிறைமாத கர்ப்பிணியை படுக்க வைத்து தங்கள் தோல்களில் சுமந்தவாறு தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்துள்ளனர்.
இரண்டு உயிரை காப்பாற்றும் நோக்கத்தோடு மட்டுமே பயணித்த இம்மக்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் பாறை, சேறு, சகதி என கரடு, முரடான காட்டுப்பாதையை கடந்து நிறைமாத கர்ப்பிணியோடு அத்தியூர் ஊராட்சி கலங்குமேட்டை சென்றடைந்தனர். பின்னர் ஏற்கனவே அறிவித்து, ஒரு மணி நேரத்திற்கு முன்பே அங்கு தயார் நிலையில் காத்துக்கொண்டிருந்த 108 ஆம்புலென்ஸில் கர்பிணி அனிதா ஏற்றப்பட்டு, விரைவாக அருகில் உள்ள ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அனுமதிக்கப்பட்ட அனிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அனிதா-ரஞ்சித் தம்பதியினரும், அனிதாவை சுமந்து வந்த ஊர் மக்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது மகிழ்ச்சி அளித்தாலும், பிரசவத்திற்காக ஜடையன்கொல்லை மலை கிராம மக்கள் அவசர காலத்தில், டோலி கட்டி தூக்ச் செல்லும் அவல நிலை தொடர்ந்து வருவதற்கு வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இது முதல் முறையோ அல்லது தவறதுலாகவோ நடந்ததோ அல்ல. அனித்தாவின் தாய், அத்தை, அக்காள், உற்றார் உறவினர், பாட்டி, பூட்டி என அத்துணை பேருக்கும் இது தான் நடந்துள்ளது. காலம் கடந்தாலும் இந்த அவலநிலை மாறவில்லை. தாங்கள் வசிக்கும் மலை கிராமங்களுக்கு முறையான சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் இதுவே தங்களின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என கோரிக்கையோடு காத்திருக்கின்றனர் அணைகட்டு தொகுதி வாழ் மலை கிராம மக்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )