நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - எந்தெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி... வெற்றி நிலைமை என்ன?
கூட்டணியே இல்லாமல் தனித்து பல கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கின்றன. இதனால் இந்தத் தேர்தலில் பல முனை போட்டி உருவாகியிருக்கிறது. அந்தப் போட்டிகளையும் அலசுகிறது ஏபிபி நாடு.
தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுடைய பதவிக்காலம் முடிவடைந்தும் நீண்ட காலம் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணிகள் அரசியல் கட்சிகளிடம் இறுதியாகிவிட்ட நிலையில், அந்தந்த கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கிவிட்டன.
இந்தத் தேர்தலில் கூட்டணியில் பல கட்சிகள் இருந்தாலும் பெரும்பகுதி இடங்களில் நிற்க தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுகவும், முன்னர் ஆண்ட கட்சியான அதிமுகவும் முடிவு செய்திருக்கின்றன. அதன் விளைவாக கூட்டணி கட்சியினருக்கு சொற்ப இடங்களை ஒதுக்கிவருகின்றன.
இந்த நிலையில் கூட்டணியே இல்லாமல் தனித்து பல கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கின்றன. இதனால் இந்தத் தேர்தலில் பல முனை போட்டி உருவாகியிருக்கிறது. அந்தப் போட்டிகளையும் அலசுகிறது ஏபிபி நாடு.
திமுக
நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலைப்போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் மெகா கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்கிறது திமுக. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக். மதிமுக போன்ற பெரும் கட்சிகள் உள்ளன.
பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் பெரும்பாலான இடங்களில் முடிவடைந்துவிட்ட நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. ஒரு சில இடங்களில் இன்னும் திமுக - காங்கிரஸ் கட்சியினர் இடையே பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறது. அந்த இழுபறி கரூரில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் கரும்புள்ளியாக சமீபத்தில் மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக
அதிமுகவுடனான கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியதையடுத்து பிரபல கட்சிகளின் கூட்டணி ஏதும் இல்லாமல், தங்கள் சொந்த பலத்தை நம்பி தேர்தலை சந்திக்கிறது அதிமுக. இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சி என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ்தான்.
அதனால் இடப்பங்கீடு பிரச்சனைகள் ஏதும் இல்லாததால் சிறு சிறு கட்சிகளுக்குக் கொடுத்தது போக முழுவதுமாக போட்டியிடப்போகிறது அதிமுக. இதுவே அவர்களுக்கு பலமாகவும் அமையும் என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
பாஜக
பல தேர்தல்களை தனித்தே சந்தித்து வந்த பாஜக கடைசி 3 தேர்தல்களில் மட்டும் அதிமுகவுடன் போட்டியிட்டிருந்தது. சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத்தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், அந்த வாக்குகள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்ததால் கிடைத்த வாக்குகள் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், நடைபெறவிருக்கும் தேர்தலில் தனித்து களமிறங்குவதால் பெறும் வாக்குகள் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவின் உண்மையான பலம் எது என்பது தெரிந்துவிடும். அண்ணாமலையை பாஜகவின் தலைவராக நியமனம் செய்தது எந்த அளவிற்கு பலனளித்திருக்கிறது என்பதும் தெரியவரும்.
பாமக
இனி யாரோடும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்றும், அப்படி கூட்டணி அமைந்தால் அது பாமக தலைமையிலான கூட்டணியாக தான் இருக்கும் என்றே முடிவு செய்துவிட்டு களமிறங்குகிறது பாமக. கடந்த சட்டமன்றத்தேர்தல் வரை அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டுவிட்டு தற்போது அன்புமணி ராமதாஸை முதலமைச்சராக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படத்தொடங்கியிருக்கிறது.
அதனாலேயே தங்கள் பலத்தைத் தெரிந்துகொள்ள தனித்து களமிறங்குகிறது பாமக. தமிழ்நாட்டில் பாமகவுக்கான செல்வாக்கு என்ன என்பதை இந்த தேர்தலின் முடிவுகள் தெரிவித்துவிடும்.
நாம் தமிழர்
குதித்தால் தலைகீழாகத்தான் குதிப்பேன் என்ற தங்களது அக்மார்க் பாணியிலேயே இந்த முறையும் கூட்டணிகள் ஏதும் இல்லாமல் தேர்தலை சந்திக்கிறது நாம்தமிழர் கட்சி. எந்தக் கட்சியுடனும் பேரம் பேசவேண்டிய அவசியம் இல்லையென்பதால் வேட்பாளர் பட்டிலை அறிவித்து தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டது நாம் தமிழர்கட்சி.
கட்சி ஆரம்பித்து பத்து ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை எந்தத் தேர்தலிலும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெற்றதில்லை என்பதால், உள்ளாட்சித் தேர்தலை தங்களது செல்வாக்கைக் காட்டுவதற்கான தேர்தலாகவேப் பார்க்கிறது நாம் தமிழர் கட்சி. சட்டமன்றத் தேர்தல்களில் வாக்கு சதவிகிதம் ஏறினாலும், வெற்றி ஒன்றே பேசப்படும் என்பதால், வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது நாம் தமிழர் கட்சி இருக்கிறது.
மக்கள் நீதி மய்யம்
நானே ராஜா நானே மந்திரி பாணியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது மக்கள் நீதி மய்யம். மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய முகங்கள் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த கையோடு மக்கள் நீதி மய்யத்திலிருந்து கிளம்ப அங்கிருக்கும் ஒரே முகம் கமல்ஹாசன் தான். எல்லாம் போய்விட்டது இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற எண்ணத்தில் தான் இருப்பதாகவேத் தெரிகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ட்விட்டர் மூலம் ஆள்களை திரட்டிக்கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். சட்டமன்றத்தேர்தலில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது மக்கள் நீதி மய்யம். இப்போது மநீம கூடாரம் காலியாகிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று எதிர்பார்த்திருக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அமமுக
அதிமுகவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சியான அமமுக ஆர்.கே.நகர் தேர்தலில் வென்றதோடு சரி. அதன் பிறகு தேர்தல்களில் நிற்கிறதேயொழிய வெற்றிபெற்றபாடில்லை. கணிசமான வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டிருந்தாலும் வெற்றி மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், சிறையில் இருந்த சசிகலா விடுதலையாகியிருப்பதால் அமமுகவுக்கு பலம் என்று கருதப்பட்ட நிலையில், அவரது எண்ணமோ அதிமுக மீதே இருக்கிறது. எனவே இந்தத் தேர்தலிலும் டிடிவி தினகரன் என்ற ஒற்றை ஆளை மட்டுமே நம்பி களமிறங்குகிறது அமமுக.
தேமுதிக
தேமுதிக கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்று எல்லாத் தேர்தலிலும் கூறும் தேமுதிக இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே எதிர்கட்சி அந்தஸ்த்துக்குச் சென்ற தேமுதிக, மாலுமி இல்லாத கப்பலைப் போல திக்குத் தெரியாத திசையில் சென்று கொண்டிருக்கிறது என்றே கூறுகின்றனர் விமர்சகர்கள்.
விஜயகாந்துக்காக அவரை கூட்டணியில் சேர்த்துக்கொண்ட அதிமுக கூட கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவை கழற்றி விட்டது. அமமுகவுடன் கூட்டணி வைத்து கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக தற்போது தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தேமுதிக. விஜயகாந்த்தால் பிரச்சாரத்திற்கு கூட வர முடியாது எனும் நிலையில் இந்த தேர்தலை தேமுதிக எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விஜய் மக்கள் இயக்கம்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த எதிர்பாராத வெற்றியைத் தொடர்ந்து மிகவும் நம்பிக்கையுடன் இந்த தேர்தலில் களமிறங்குகிறது விஜய் மக்கள் இயக்கம். கடந்தத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கக் கொடி, விஜய் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதியளிக்காத நிலையிலும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் பெற்ற வெற்றி பேசுபொருளாக அமைந்தது.
அனைவருக்கும் சர்ப்ரைஸாக அமைந்தது விஜய் மக்கள் இயக்கத்தினரின் வெற்றி. அதனால் தான் இந்த முறை விஜய் மக்கள் இயக்கக்கொடியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அனுமதிகள் கிடைத்திருப்பதால் புதுதெம்புடன் உத்வேகமாக களமிறங்குகிறது விஜய் மக்கள் இயக்கம்.
இந்திய ஜனநாயகக் கட்சி
ஒவ்வொருத் தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி இந்த முறை கூட்டணியில்லாமல் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறது. அதனால் தானோ என்னவோ யாரையும் குறைசொல்லியோ மற்றவர்களை விமர்சித்தோ வாக்குகள் கேட்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.
மக்கள் தங்களை ஏற்கும் வரை தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம் எனக் கூறியிருக்கும் அதன் தலைவர் ரவி பச்சமுத்து மக்கள் மத்தியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அமைதியான ஆதரவு அலை இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அந்த அலை எப்படி இருக்கும் என்பது தேர்தல் முடிவுகள் சொல்லிவிடும்.
இந்த கட்சிகள் மட்டுமல்லாமல் பல்வேறு கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. ஆனாலும், களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பிருக்கும் கட்சிகளாக மேலே சொல்லப்பட்ட கட்சிகளை தான் கருதுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்