லாக்கப் மரணத்தை கண்டித்து போராட்டத்தை அறிவித்த தவெக.. களத்திற்கு வருகிறாரா விஜய்?
அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என தவெக அறிவித்துள்ளது. இதில், விஜய் கலந்து கொள்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இளைஞர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தவெக சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விஜய் கலந்து கொள்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிர்வலைகளை ஏற்படுத்தும் லாக்கப் மரணம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில், பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், அஜித்குமார் என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாயார் அந்த கோயிலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது, அவர்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு கூறி, காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் காவல் நிலையத்தில் நிகிதா புகார் அளித்துள்ளார்.
போராட்ட களத்திற்கு வருகிறாரா விஜய்?
அது மட்டுமல்லாமல், நிகிதா மற்றும் கோயில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அஜித் குமார் கடுமையாக லத்தியால் தாக்கி விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் அஜித்குமார் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு, பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என தவெக அறிவித்துள்ளது. இதில், விஜய் கலந்து கொள்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
போராட்டம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் தவெக வெளியிட்ட அறிக்கையில், "கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 03.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை தவெக தலைவர் விஜய்யின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என பொதுச்செயலாளர் என். ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.





















