(Source: ECI/ABP News/ABP Majha)
Vijay: "மோடி ஆரோக்கியமா இருக்கனும்! பெரியார் பாதையில் பயணிப்போம்" நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
பெரியார் மற்றும் பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மிகப்பிரபலமான கதாநாயகர்களில் ஒருவராக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
பெரியார், மோடி பிறந்தநாள்:
தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய பிறகு அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து மட்டும் கூறி வந்த நடிகர் விஜய்,கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அரசியல் நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி திராவிட இயக்கங்களின் ஊற்றாக திகழும் பெரியாரின் 146வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெரியார் பிறந்த இதே செப்டம்பர் 17ம் தேதிதான் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும். நாட்டின் பிரதமரான மோடியின் 74வது பிறந்தாளும் கொண்டாடப்படுகிறது.
எதிரெதிர் கொள்கைகள் கொண்ட இரு தலைவர்களுக்கும் இன்று நடிகர் விஜய் தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் தெரிவித்துள்ளார். பெரியாருக்காக அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்தில், பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரடீஸ், சமூகச் சீர்த்திருத்தவாதி போன்ற வாசகங்களுடன் பாராட்டி பெரியார் பிறந்த நாளில் பெண் உரிமை, பெண் கல்வி, பெண்களம் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கு முன்பு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜய். பிரதமர் மோடிக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் அவர் வாழ பிரார்த்திக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
திராவிட சிந்தனைகளின் தலைவர் பெரியார், ஆர்.எஸ்.எஸ்.சின் வெளிப்பாடான பா.ஜ.க. கட்சியின் வழித்தோன்றல் பிரதமர் மோடி ஆகிய இரு எதிரெதிர் கருத்துக் கொண்டவர்களுக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியல் நாகரீகத்தின்படி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், முதன்முறையாக அரசியல் களத்தில் நுழைந்துள்ள விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் குறித்து ஏதும் பெரியளவில் நடிகர் விஜய்யோ, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளோ எந்த இடத்திலும் பேசவில்லை. அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தலில் நேரடியாக களமிறங்கப்போகும் தமிழக வெற்றிக்கழகத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
கடந்த காலத்தில் விஜய்க்கும், பா.ஜ.க.வுக்கும் இணக்கமான உறவு இல்லாமல் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.