கரூரில் மணல் குவாரி உரிமையாளர்களுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் போராட்டம்
கரூர் மாவட்டம், மல்லம்பாளையம், நெரூர் ஆகிய இரண்டு இடங்களில் காவிரி ஆற்றில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு லாரிகள் மூலமாக தமிழகம் முழுவதும் கட்டுமான தேவைகளுக்கு மணல் அனுப்பப்பட்டு வருகிறது.
கரூரில் மணல் லாரி ஓட்டுநரை தாக்கிய ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என மணல் குவாரி உரிமையாளர்களுக்கு எதிராக லாரி ஓட்டுனர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், மன்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட மல்லம்பாளையம், நெரூர் ஆகிய இரண்டு இடங்களில் காவிரி ஆற்றில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு லாரிகள் மூலமாக தமிழகம் முழுவதும் கட்டுமான தேவைகளுக்கு மணல் அனுப்பப்பட்டு வருகிறது.
நாவல் நகர் பகுதியில் குவாரிகளுக்கு மணல் அல்ல செல்லக்கூடிய லாரிகள் நிறுத்தி வைக்கப்படும் ஸ்டாக் பாயிண்ட் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று இரவு லாரிகளை வரிசையாக நிறுத்தச் சொல்லி மணல் குவாரி ஊழியர்கள் ஓட்டுநர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இடைவெளி அதிகமாக விடாமல் நெருக்கமாக நிறுத்தி வைக்க கூறியுள்ளனர். இதில் மணிவேல் என்ற ஓட்டுநர் நெருக்கமாக நிறுத்தி வைத்தால், லாரிகள் ஒன்றுக்கு ஒன்று மோதி சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். அப்போது ஓட்டுநரை மணல் குவாரி ஊழியர்கள் அரவிந்த், பிரவீன், ராஜா ஆகிய மூன்று பேர் தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஓட்டுனர் மணிவேல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மோதலின் போது குவாரி ஊழியர்கள் மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் செல்ல ராஜா மணி தலைமையில் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நாவல் நகர் ஸ்டாக் பாயிண்ட் பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மணல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் வாங்கல் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஓட்டுனர் மணிவேல் மீது தாக்குதல் நடத்திய ஊழியர்களை வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் எனவும், மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்காத பட்சத்தில் ஸ்டாக் பாயிண்ட் பகுதியில் தொடர்ந்து காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என்றும், இன்று மதியத்திற்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் லாரிகளை சாலைகளில் நிறுத்தி மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்