Watch Video: இன்று முதல் நீ கடவுள்.. சென்னையில் வெள்ள நிவாரண நிதி வாங்கிய திருநங்கை செய்த செயல்..
புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் அட்டை இருப்பவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
சென்னையில் வெள்ள நிவாரண நிதி வாங்கிய திருநங்கை ஒருவர் அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் தாக்கியது. இதனால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்ட நிலையில் சென்னை மக்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்தனர். கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை, ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆகியவை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
அதேசமயம் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை காரணமாக மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். வெள்ளம் பாதித்த இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் அட்டை இருப்பவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
தற்போது வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட்டு நிவாரணத் தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.அதேசமயம் சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் ரேஷன் கார்டு வேறு முகவரியிலும், இன்னும் பெறாமலும் உள்ள நிலையில் அவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இவர்களும் நிவாரணத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்தது. இதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. இதுவரை 5.5 லட்சம் பேர் 4 மாவட்டங்களிலும் நிவாரணத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
வெள்ள நிவாரணமாக பணமாக ரூ.6000/- கொடுத்ததையும் வாங்கி வெச்சிக்கிட்டு தமிழ்நாடு அரசை குறை சொல்லும் தற்குறி சங்கி தம்பிகளுக்கு நடுவே, லைன்ல நின்னு தனக்கு கொடுத்த பணத்தை இயலாதோருக்கு பிரித்து கொடுத்த திருநங்கை ரோஜா அக்கா, ஒரு தேவதை! ♥ pic.twitter.com/coryCuThYJ
— Tr Gayathri Srikanth (@Tr_Gayathri) December 22, 2023
இதனிடையே எக்ஸ் வலைத்தளத்தில் வீடியோ ஒன்று ட்ரெண்டிங்காக பரவி வருகிறது. அதில் திருநங்கை ரோஜா என்பவர் வெள்ள நிவாரண நிதியாக பெற்ற ரூ.6 ஆயிரம் பணத்தை கவர் ஒன்றில் வைத்து இயலாதோருக்கு வழங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோவை புதுச்சேரி மகளிர் அணியை சேர்ந்த காயத்ரி ஸ்ரீகாந்த் என்பவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. பலரும் திருங்கை ரோஜாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.