TNUSRB: தமிழில் பட்டம் படித்தால் மட்டும் தான் காவலர் தேர்வில் முன்னுரிமை - இளைஞர்கள் ஏமாற்றம்
தமிழில் பட்டம் படித்தால் மட்டும் தான் காவலர் தேர்வில் முன்னுரிமை பெறமுடியும் என்ற அறிவிப்பு இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
தமிழக காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போதைய அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 621 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2023க்குள் விண்ணபிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்றவர்களுக்கான 20% முன்னுரிமை :
பொது விண்ணப்பதாரர்கள் மொத்த காலி பணியிடங்களில் 20% பணியிடங்கள், முதலாம் வகுப்பிலிருந்து முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை (தகுதி வாய்ந்த இளங்கலை பட்டம்) ஒவ்வொரு தேர்வு நிலையிலும் தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றிருப்போருக்கு வழங்கப்படும் என காவலர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி பயின்று வருபவர்கள் கல்லூரியில் ஆங்கிலத்தில் படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறிப்பாக இளங்கலை தமிழ் மட்டுமே தமிழ் மொழியில் பயில முடியும். கடந்த சில வருடங்களாக தான் கல்லூரியில் தமிழ் மொழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காவல் துறை சார்பில் தற்போது உதவி காவல் ஆய்வாளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்றுவிட்டு கல்லூரி ஆங்கிலத்தில் பயின்றதால் தங்களால் தமிழ்வழியில் படித்ததற்கான முன்னுரிமை பெறமுடியவில்லை என்ன வேதனை தெரிவிக்கின்றனர்.