TN Spurious Liquor Death: அதிகரிக்கும் கள்ளச்சாராய மரணங்கள்: மெத்தனால் விற்பனை செய்த 9 பேர் கைது...
மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில் மெத்தனாலை விற்பனை செய்த 9 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில் மெத்தனாலை விற்பனை செய்த 9 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களின் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் என்னிக்கை 14ஆக அதிகரித்தது. இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த மரக்காணம் காவல்துறையினர் ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய இளைய நம்பி (45), அமரன் (27), பர்கத்துல்லா (51), முத்து (33) ஆறுமுகம் (44) ரவி (54) மண்ணாங்கட்டி (57) குணசீலன் (42), ஏழுமலை(50) ஆகிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் தலைமறைவாக ஒருவரை தேடி வருகின்றனர்.
இந்த உயிரிழப்புகளுக்கு சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதே காரணம் என தெரியவந்ததை தொடர்ந்து மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஏழுமலை என்பவரை வில்லியனூர் அருகிலுள்ள பரசுராமபுரத்தில் உள்ள அவரது கெமிக்கல் ஆலையில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் கெமிக்கல் ஆலையில் இருந்து மெத்தனால் மற்றும் ஸ்பிரிட் ஆகிய கெமிக்கலை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உள்ள கெமிக்கல் ஆலை உரிமையாளர் இளையநம்பியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனாலை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவலை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார்.