TN Rain Alert : மீண்டும் ஆரம்பிக்குதா? நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Rain Alert : தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 27-ஆம் தேதி (நாளை) வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும். இது அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.
26.01.2023 மற்றும் 27.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
28.01.2023 மற்றும் 29.01.2023: தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
30.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பெருஞ்சாணி (கன்னியாகுமரி) 5, புத்தன் அணை (கன்னியாகுமரி) 4, முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
26.01.2023 முதல் 28.01.2023 வரை: பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29.01.2023 மற்றும் 30.01.2023: இலங்கையை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.