Pongal Wishes: சமத்துவ பொங்கல் என கோலமிட்டு, சமூகவலைதளங்களில் பகிருங்கள் : முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
தைத்திருநாள் பொங்கலை அனைவரும் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தைத்திருநாள் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், “உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகப் பொங்கல் நன்னாள் கொண்டாடப்படுகிறது. இது உழைப்பின் மேன்மையைப் போற்றும் திருநாள். உழுது விளைவித்து அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கிப் பொங்கல் வைத்து, அந்த விளைச்சலுக்குக் காரணமான இயற்கை ஆற்றலாம் சூரியனுக்கும், உழவுக்குத் துணையாய் இருந்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துகிற நன்னாள்! சாதி - மத பேதமற்ற சமத்துவத் திருநாள்! ஆரியப் பண்பாட்டுத் தாக்கம் ஏதுமின்றி, திராவிடர்களாம் தமிழர்களின் தனிச் சிறப்புமிக்க தொன்மைமிகு பண்பாட்டின் கொண்டாட்டமாக அமைந்திருப்பது தை முதல் நாளாம் பொங்கல் திருநாள்!
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இழந்துவிடாத வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு எதிர்கொண்ட மிக்ஜாம் மழை - வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது. கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் புதுடெல்லியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டு மக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிடும் நடைமுறையைக் கொண்டு வந்தார். அந்த எதிர்பார்ப்பு இன்றளவும் மக்களிடம் இருப்பதை உங்களில் ஒருவனான நான் அறிவேன். அதனால்தான் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று திராவிட மாடல் அரசு அறிவித்தது. அத்துடன், ரொக்கத் தொகையும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தை நான் அறிந்தேன்.
கடுமையான நிதி நெருக்கடி நிலவிய சூழலிலும் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் புறந்தள்ளாமல் பரிசீலித்தேன். சர்க்கரை நாவில் இனிக்கும். ரொக்கப் பணம் மனதில் இனிக்கும் என்பதால் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் கூடுதல் மகிழ்ச்சி பொங்கிடும் வகையில் 2 கோடியே 19 இலட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. ரொக்கத்துடன் கூடிய இந்த பரிசுத் தொகுப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை 2,436.19 கோடி ரூபாய் ஆகும். அத்துடன் 1 கோடியே 77 இலட்சம் சேலைகளும் வேட்டிகளும் ஏழை - எளிய மக்களுக்கு பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகள் மூலம் இந்த ஆண்டுதான் பொங்கலுக்கு முன்பே வழங்கப்படுகின்றன. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய், ஜனவரி 10-ஆம் தேதியே அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பொங்கலின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது நமது திராவிட மாடல் அரசு.
’எல்லாருக்கும் எல்லாம்’ என்பதே திராவிட மாடல் அரசின் அடிப்படைக் கோட்பாடு. ‘நான்தான் எல்லாம்’ என்கிற போக்கில் செயல்படுகிற ஆட்சியதிகாரம் ஜனநாயகத்திற்குச் சீர்கேடு. அத்தகைய சீர்கேட்டை அகற்றி, ஜனநாயகம் மலர்வதற்கு மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய - கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய மத்திய அரசு 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைந்திட வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கக்கூடிய, மதநல்லிணக்கத்தைப் போற்றக்கூடிய, மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.
தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.
எப்போதும் பொங்கல் அன்று கழகத் தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் ‘சமத்துவப் பொங்கல்’ என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும்.
குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் - மாடுபிடி வீரர்கள் என வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.
கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் ‘சமத்துவப் பொங்கல்’ எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.
பொங்கல் கொண்டாட்டம் தரும் ஊக்கத்தோடு, நமக்குக் காத்திருக்கும் பணிகள் இரண்டு! தாய்த் தமிழ்நாட்டை மேம்படுத்துவது முதலாவது. இந்திய ஒன்றிய அரசில் சமூகநீதி – சமதர்ம - மதச்சார்பற்ற நல்லரசை அமைப்பது இரண்டாவது. இவை இரண்டையும் அடைய எந்நாளும் பாடுபடுவோம். உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய பொங்கல் - தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.