TN NEET Exemption Bill: முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் ஆளுநரை திரும்பப்பெறுமாறு செய்ய முடியுமா? சட்டம் சொல்வது என்ன?
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
நீட் தேர்விற்கு தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மசோதா ஒன்றை தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பியது. அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
அதில் தமிழ்நாடு ஆளுநரை மத்திய அரசு திரும்பிப்பெற வேண்டும் என்ற முழக்கத்தையும் தமிழ்நாடு எம்பிக்கள் வைத்தனர். இந்நிலையில் ஆளுநரை திரும்ப பெற முடியுமா? மாநில அரசுக்கு அதில் அதிகாரம் உண்டா? என்பது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் கூறுவது என்ன?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர்களை நியமிக்கும் முறை கனடா நாட்டைப் போல் பின்பற்றி ஏற்கப்பட்டது. அதன்படி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 155-ன்படி ஒவ்வொரு மாநிலத்தின் ஆளுநரை குடியரசுத் தலைவர் நியமிப்பார். ஒரு மாநில ஆளுநராக நியமிக்கப்பட ஒருவருக்கு இரண்டு தகுதிகள் மட்டுமே அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ளது. அதாவது ஒரு மாநில ஆளுநராக நியமிக்கப்பட தகுதிகள்:
- ஒருவர் இந்திய குடியுரிமை பெற்று இருக்க வேண்டும்.
- அவருக்கு 35 வயது முடிந்திருக்க வேண்டும்.
இந்த இரண்டு தகுதிகளும் இருந்தால் ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்படலாம். ஒரு மாநில ஆளுநருக்கு பொதுவாக 5 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும். ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 156(1)-ன்படி அவரை எப்போது வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கலாம். ஆகவே ஆளுநரை நியமனம் செய்யவதிலோ அல்லது நீக்குவதிலோ மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை. இவை அனைத்தும் மத்திய அரசின் கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில சட்டப்பேரவையின் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய பின்பு மீண்டும் அதை மாநில அரசு அனுப்பினால் ஆளுநர் என்ன செய்யலாம்? என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுவது என்ன?
பொதுவாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-ன்படி ஒவ்வொரு சட்டப்பேரவையின் மசோதாவும் மாநில ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பிறகு சட்டமாகும். அதேபோல் சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஒரு முறை திருப்பி அனுப்பலாம். அவ்வாறு திருப்பி அனுப்பும் மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கலாம். அவ்வாறு அவர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துவிட்டால் அதன்பின்னர் அந்த மசோதாவிற்கு ஆளுநருக்கும் தொடர்பு இல்லை. அதன்பின்னர் குடியரசுத் தலைவர்தான் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழக ஆளுநர் 4 எம்.எல்.ஏக்களுக்கு கட்சி தலைவரா? - ஜெய்பீம் சந்துரு கேள்வி