CO-OP Bazaar: வீடு தேடி வரும் கூட்டுறவுத்துறை பொருட்கள்.. தமிழ்நாடு அரசின் அசத்தல் நடவடிக்கை..பொதுமக்கள் வரவேற்பு..!
கூட்டுறவுத்துறை நிறுவனங்களின் தயாரிப்புகளை பெரிய அளவில் சந்தைப்படுத்துவதற்காக புதிய செயலியை தமிழ்நாடு அரசு சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை நிறுவனங்களின் தயாரிப்புகளை பெரிய அளவில் சந்தைப்படுத்துவதற்காக புதிய செயலியை தமிழ்நாடு அரசு சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றன. இதனை மேலும் விரிவுப்படுத்தும் விதமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் CO-OP Bazaar என்னும் கூட்டுறவு சந்தைக்கான செயலி உருவாகப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதனால் இனிமேல் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்யலாம்.
முதற்கட்டமாக 8 கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தி செய்யும் 64 வகையான பொருட்களை டோர் டெலிவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஒப்புதலோடு இந்த திட்டத்தை அறிவித்தோம். இன்று செயல்படுத்தி உள்ளோம். குறைவான விலையில் நுகர்வோர்கள் பயன்பெறும் விதமாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த செயலியை அனைவரும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் எனவும் கூறினார்.
அப்போது அவர் தக்காளி விலை உயர்வு குறித்து பேசினார். அதில், ‘ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அளவு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புது முயற்சி மக்களுக்கு எந்தளவு பலன் தருகிறது என்பதை ஆய்வு செய்து விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். மேலும் பருவமழை காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை ஏற்றத்தைக் கண்டுள்ளது. வெளிச்சந்தையில் விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.