TN Assembly Session NEET: முதன்முறையாக ஆளுநருக்கு திருப்பி அனுப்பப்படும் நீட் விலக்கு மசோதா.. பேரவையில் நடந்த ஹைலைட்ஸ்..!
TN Assembly Session NEET Highlights: மீண்டும் நிறைவேற்றப்பட்டிருக்கும் நீட் மசோதாவை ஆளுநர் நிச்சயம் குடியரசுத்தலைவருக்கு அனுப்புவார் என்று நம்புவதாக கூறினார்.
கடந்தாண்டு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நீட் தேர்வுக்கு எதிராக விலக்கு கோரி மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இந்த சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களை நீட் தேர்வு காக்கிறது. நீட் தேர்வு சமூக நீதியை உறுதி செய்வதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் விளக்கம் அளித்தது. ஆளுநரின் இந்த நடவடிக்கை தமிழக அரசிற்கும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையின் போது, தமிழக எம்.பிக்கள் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் சபாநாயகர் வெங்கையா நாயுடு அதற்கு அனுமதி தரவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று மீண்டும் நீட் மசோதாவை நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடியது. சபா நாயகர் உரையுடன் தொடங்கிய இந்த சிறப்புக்கூட்டத்தில் கூட்டணிக்கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் நீட் தேர்வு குறித்தான தங்களது கருத்தை முன்வைத்தனர். ஆனால் பாஜக நீட் விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. இறுதியாக பேசிய முதல்வர் ஸ்டாலின், மீண்டும் நிறைவேற்றப்பட்டிருக்கும் நீட் மசோதாவை ஆளுநர் நிச்சயம் குடியரசுத்தலைவருக்கு அனுப்புவார் என்று நம்புவதாக கூறினார்.
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:
சட்டப்பேரவையில் முதல்வர் பேசும்போது, “நாம் இன்று நீட் தேர்வு குறித்து விவாதிப்பதற்கு மட்டும் கூட வில்லை. தமிழ் நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையை உரிமையை காப்பதற்காகவும் நாம் இன்று கூடியிருக்கிறோம். கூட்டாட்சி தத்துவம் காப்பற்றப்படுவதற்காக நாம் இன்று கூடியிருக்கிறோம்.
2010 ஆம் ஆண்டு நீட் தேர்வு முன் மொழியப்பட்ட போதே, கலைஞர் அதனை கடுமையாக எதிர்த்தார். அன்றைய காலத்தில் நீட் தேர்விற்கு எதிராக, 115 வழக்குகள் தொடரப்பட்டது. இந்த தேர்வு முறை அரசியலைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமானதுதான். அவர்களுக்குத்தான் இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கிறது. அவ்வளவு பணம் கொடுத்து பயிற்சி பெற முடியாதவர்களுக்குத்தான் நாம் நீட் விலக்கு கேட்கிறோம்.
2019 ஆம் ஆண்டு 4 பேரும், 2020 ஆம் ஆண்டு 5 பேரும் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்களவையில் ஒன்றிய அரசே கூறியுள்ளது. இது தொடர்பாக தற்போது வரை 12 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது மக்களிடம் கருத்து கேட்டு 193 பக்க அறிக்கையை சமர்பித்தது. நீண்ட பரிசீலனைக்கு பிறகு, நீட் விலக்கு மசோதா இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த நீட் விலக்கு மசோதாவை ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் 142 நாட்கள் அதை வைத்திருந்து விட்டு, நமக்கே அதை திருப்பி வந்திருக்கிறது.
அதற்காக அவர் சொன்ன காரணங்கள் சரியானவை அல்ல. அறிக்கையானது ஊகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு என்பது ஒரு பலி பீடம் போன்றது. கறுப்பாக இருப்பவர்கள் உள்ளே வரக்கூடாது என்று சொல்வது எப்படி பாகுபாடோ, அதே போல மாநில கல்வித்திட்டத்தில் இருந்து வினாக்களை எடுக்காததும் பாகுபாடுதான். 2, 3 ஆண்டுகள் பணம் செலுத்தி பயிற்சி பெற முடிந்தவர்கள் மட்டுமே நீட் தேர்வில் நுழைய முடியும் என்பது 21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் அறிவு தீண்டாமை. நீட் தேர்வு பணக்கார நீதியை பேசுகிறது. அதனால் மீண்டும் நிறைவேற்றப்படும் இந்த நீட் விலக்கு மசோதவை ஆளுநர் காலம் தாழ்த்தாமல் குடியரசு தலைவருக்கு அனுப்புவார் என்று நம்புகிறேன்.