சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு புதிய திட்டங்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இதனை அறிவித்தார்.
சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை இன்று நடைபெற்றது. அதில் முக்கியத்துவம் வாய்ந்த பல செயல்திட்டங்களை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இதனை அறிவித்தார்.
அறிவிப்பில் இடம்பெற்றவை பின்வருமாறு,
காலநிலை மாற்றத்தால் தமிழ்நாடு கடுமையான விளைவுகளைச் சந்தித்து வரும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த பல செயல் திட்டங்களை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது.@mkstalin @SMeyyanathan @supriyasahuias pic.twitter.com/XN9BQNaBoG
— Satheesh lakshmanan 🖋சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) September 3, 2021
1) மாநில நிருவாகத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து காலநிலை மாற்றம் தொடர்பான ஒரு வலுவான கொள்கையை உருவாக்குதல்.
2) பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வினை குறைப்பதற்கான புதிய செயல்திட்டங்களை உருவாக்குதல்.
3) தமிழ்நாட்டில் 'நிகர கார்பன் அளவு பூஜ்ஜியம்' என்ற நிலையை அடைவதற்காக ஒருங்கிணைந்து செயல்படுவதுடன் இப்பணியில் சமூகத்தையும் இணைத்து கொள்வதற்கான நீண்ட கால செயல்திட்டதை உருவாக்குதல்.
4) காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக சமூகத்தின் பல்வேறு பங்குதாரர்களும் ஒருங்கிணைந்து செயல்படும் விரைவு பன்நோக்கு அணுகுமுறையை ஊக்குவித்தல்.
5) ஆதாரங்கள் அடிப்படையிலான பசுமை மாதிரிகளை உருவாக்குவதற்கான, நிரூபிக்கப்பட்ட காலநிலை மாற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காலநிலை மாற்றத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல்.
6) கீழ்மட்ட அளவில் காலநிலை மாற்றத்தை மேலாண்மை செய்வதற்காக உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாடு.
7) காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான வெற்றிகரமான தகவமைப்பு மற்றும் பாதிப்பைக் குறைக்கும்மாதிரிகளை உருவாக்குவதை ஊக்குவித்தல்
8) மதிப்பு வாய்ந்த மின்சாரத்தை சேமிப்பதற்கும் மற்றும் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் தேவையான திறன்மிக்க எரிசக்திக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான அளவுகோல்களை உருவாக்குதல்.
9) நச்சு வாயுக்கள் உமிழ்வை குறைக்கும் நோக்கத்துடன் மற்றும் மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடைமுறை மாதிரிகளை உருவாக்குதல்.
10) வெளிப்படைத்தன்மை வாய்ந்த மற்றும் நம்பத்தகுந்த அமைப்புகள் மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு
வரையறைகளை சிறப்பாக பின்பற்றுவதற்கான ஒரு சிறந்த கண்காணிப்பு நடைமுறையை உருவாக்குதல்.
11) இயற்கை வளங்களை பேணிப் பாதுகாத்தல் மற்றும் அவற்றின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவித்தல்.
முன்னதாக 2021-22ம் ஆண்டிற்கான மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் பிரத்யேக சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.