போலீசார் கண் முன்னே ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு! விசிக நிர்வாகி கைது; மகனுக்கு வலைவீச்சு!
விழுப்புரம்: திண்டிவனத்தில் போலீசார் கண் முன்னே ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு! விசிக நிர்வாகி கைது; மகனுக்கு போலீஸ் வலைவீச்சு!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏற்பட்ட தகராறில், போலீசார் முன்னிலையிலேயே ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது மகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட தகராறு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் முருங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பரத். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பரத் தனது ஆட்டோவில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரோசனை பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரான புரட்சிக் கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பரத் ஓட்டிச் சென்ற ஆட்டோ, புரட்சிக் கண்ணன் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் முற்றி, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்குக் கைகலப்பாக மாறியுள்ளது.
போலீசார் முன்னிலையிலேயே நடந்த அரிவாள் வெட்டு!
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். மேலும், இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்தச் சூழலில், புரட்சிக் கண்ணனின் மகன் இலக்கியன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆட்டோ ஓட்டுநர் பரத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. போலீசார் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் பரத்துக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
திடீரென நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் கண் முன்னே ஒருவர் ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
தாக்குதலில் காயமடைந்த பரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும், காயத்தின் தீவிரம் காரணமாக மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசிக நிர்வாகி கைது; மகனுக்குத் தீவிர வலைவீச்சு
இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக காயமடைந்த பரத் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான புரட்சிக் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அவரது மகன் இலக்கியன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
இதற்கிடையே, திண்டிவனத்தில் போலீசார் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தகராறு மற்றும் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.
போலீசார் சம்பவ இடத்தில் இருந்தபோதே ஆட்டோ ஓட்டுநர் ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. தலைமறைவாக உள்ள இலக்கியனைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















