“திராவிடம் பற்றி அறியாத சில கோமாளிகள் கேள்வி கேக்குறாங்க” : சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் மூலம் நூற்றாண்டுக் காலத்திற்கு அறிவின் வெளிச்சம் பரவவிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிடம் மற்றும் திராவிட இயக்கம் குறித்து அவை பற்றி அறியாதவர்களும் சில கோமாளிகளும் கேள்வி கேட்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
‘இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்குப்பத்தில் இந்த புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலந்துக் கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இல்லம் தேடி கல்வி’ என்பது சாதாரணத் திட்டமல்ல. எல்லா திட்டங்களையும் போல இதுவும் ஒரு திட்டம் என சொல்லிவிட முடியாது. இந்தத் திட்டம்தான் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றயிருக்கிறது. அதன் மூலம் நூற்றாண்டுக் காலத்திற்கு அறிவின் வெளிச்சம் பரவவிருக்கிறது. மிகப் பெரிய கல்விப் புரட்சிக்கு, மறுமலர்ச்சிக்கு இந்த இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மிகப் பெரிய விஷயங்கள் எல்லாம் இப்படி சிறு சிறு அளவில்தான் தொடங்கப்பட்டது. நூற்றாண்டுக் காலமாக மறுக்கப்பட்ட கல்வியைத் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் வழியாகக் கொண்டுபோய் சேர்த்தது ஆரம்பக்கால திராவிட இயக்கம்தான்.
திராவிட இயக்கம், திராவிடம் என்றால் என்னவென சில கோமாளிகளும் அதைப் பற்றி அறியாதவர்களும் கேள்வி கேட்கிறார்கள். இதுதான் திராவிடத்தின் கொள்கை” என தெரிவித்தார்.
கொரோன பரவல் காரணமாக ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் வகையில் “இல்லம் தேடி கல்வி”என்ற திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் செயல்படுத்த உள்ளது.
இந்த திட்டம் 200 கோடி செலவில் காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது. இப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதகாலம் தினமும் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் சொல்லி கொடுப்பார்கள். தற்போது, தன்னார்வலர்கள் பதிவு ஆன்லைன் வாயிலாக (www.illamthedikalvi.tnschools.gov.in) நடைபெற்று வருகிறது.
தன்னார்வலர்களின் கல்வித் தகுதியைப் பொறுத்தவரை 12ம் வகுப்பு முடித்தவர்கள் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் கற்பிக்க தகுதியுடையவர்கள். அதே பகுதியைச் சேர்ந்த பெண் தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 20 குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட வேண்டும். தினமும் மாலை 5 மணி இரவு 7 மணி வரை ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட வேண்டும். தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்படும். ஊக்கத்தொகையும் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.