Thiruchendur Vaikasi Visaka :பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத் திருவிழா...! திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு லட்க்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு லட்க்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமர்சியைாக நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில், நடப்பாண்டில் ஜூன் 12-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி, கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. விஸ்வரூப தரிசனம் 1.30 மணிக்கு நடைபெற்று, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, காலை 9 மணியளவில் உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது.
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக முருகனை தரிசிக்க பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
அதிகாலை ஒரு மணி முதல் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்ற பிறகு சுவாமி ஜெயந்திநாதர் கோயிலில் இருந்து தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
இதன்பின்னர், சுவாமி 11 முறை வசந்த மண்டபத்தை வலம் வருகிறார். இதன்பின்னர், வைகாசி விசாகத்தின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெற உள்ளது. இதன் பின்னர், தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நாளையும் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், வெளியூர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்