முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டதே மாவட்ட சுகாதார பேரவை - கரூர் கலெக்டர் தங்கவேல்
மாவட்ட சுகாதார பேரவையின் முக்கிய நோக்கமே வட்டாரங்கள் உள்ள சுகாதார கட்டமைப்பை சீரமைப்பது மற்றும் வலுப்படுத்துவது ஆகும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கரூர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைசார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் நகராட்சி ஊராட்சி தலைவர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் புகளூர் நகராட்சி தலைவர் குணசேகர் தங்கள் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் பிணவறையில் குளிர்சாதன வசதி அமைத்து தர கோரிக்கை விடுத்தார்.
பின்னர் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோ ஓலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல், "மக்கள் அதிக பயன்பெறும் வகையிலும் உருவாக்க நமது தமிழ்நாடு முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டதே மாவட்ட சுகாதார பேரவை ஆகும். மாவட்ட சுகாதார பேரவையின் முக்கிய நோக்கமே வட்டாரங்கள் உள்ள சுகாதார கட்டமைப்பை சீரமைப்பது மற்றும் வலுப்படுத்துவது ஆகும்.
இதன் அடிப்படையில் வட்டாரங்கள் தோறும் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சுகாதார பணியாளர், தோழமை துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களிடம் கலந்து ஆலோசித்து சுகாதார கட்டமைப்புக்கு தேவையான, புதிய துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டிட வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள், குடிநீர் வசதி மற்றும் மருத்துவ, உபகரணங்கள் போன்றவற்றின் தேவைகளை ஆராய்ந்து அதனை மாவட்ட அளவில், மாவட்ட சுகாதார பேரவையின் தீர்மான ஒப்புதலுடன் இயக்குநரகத்திற்கு பரிந்துரைக்கபடும். மாவட்ட சுகாதார பேரவையின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட தீமானங்கள் மாநில அளவிலிருந்து பகுப்பாய்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படும். இதன் மூலம் நமது மாவட்டத்திற்கு தேவையான சுகாதார வசதிகள் நிறைவேற்றுவதன் மூலம் பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெறலாம்" எனத் தெரிவித்தார்.