தர்மபுரி: அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்...!
’’காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் குற்றப்பதிவேடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்’’
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வருமுன் காப்போம்' திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று சேலம் வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள 385 வட்டாரங்களில் 1 வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதம் 1,155 முகாம்களும், 1 மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 20 மாநகராட்சிகளில் 80 முகாம்களும், சென்னை பெருமாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் 15 முகாம்கள் என மொத்தம் 1,250 முகாம்கள் நடத்தபட உள்ளதாக சுகாராதத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், குடல் நோய் மருத்துவர், குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், இருதய நோய் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், நரம்பியல் மருத்துவர், சித்த மருத்துவர் என 15 சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்கள் பொதுமக்களை முழுமையாக பரிசோதித்து உடலில் என்ன பிரச்சனை இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தேவையான சிகிச்சை வழங்கப்படும். சர்க்கரை நோய், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இந்த முகாமில் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மக்களை தேடி மருத்துவத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.
பின்பு அங்கிருந்து புறப்பட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிநவீன ஜவ்வரிசி ஆலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் மரவள்ளி விவசாயிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர், கருப்பூரில் உள்ள சிட்கோ மகளிர் தொழிற்பூங்காவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர், சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தர்மபுரி மாவட்டம் செல்லும் வழியில் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த காவல் நிலையம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டிருந்து குறித்து விளக்கும் கல்வெட்டை பார்த்த முதல்வர், காவல் நிலையத்திற்குள் சென்று வழக்குப்பதிவேடுகள், மக்கள் புகார் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதிக அளவில் வந்துள்ள புகார்களின் தன்மை என்ன?, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வந்த புகார் மனுக்களின் தன்மை குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நிலப்பிரச்னைகள் சார்ந்த புகார்கள் அதிகமாக வந்துள்ளதாகவும், வருவாய்துறை அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.