பூச்சி மருந்து குடித்து +2 மாணவி தற்கொலை - மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தியதாக பள்ளி மீது புகார்
பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பாஜகவினர் காவல்துறையை கண்டித்து மருத்துவ கல்லூரி வல்லம் சாலை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் முன்பு சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தில் 12-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி ஒருவர், செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளார். மறுதினம் 10ஆம் தேதி மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து, அந்த மாணவியை அவரது தந்தை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் மணவியின் உடல் நிலை மோசமானதால், கடந்த 15 ஆம் தேதி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதின் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலினால் பூச்சி மருந்து குடித்ததாகவும் மாணவி கூறியுள்ளார். உடனடியாக இது குறித்து டாக்டர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மாணவியிடம் புகாரை பெற்று கொண்டனர். கடந்த 17 ஆம் தேதி அந்த மாணவியின் உறவினர்கள், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையம் முன்பு கூடிவிடுதி வார்டன், அந்த மாணவியை மதம் மாறச்சொல்லி வற்புறுத்தியதால் பூச்சி கொல்லி மருந்தை குடித்ததாக கூறி கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் வழக்கு பதிந்து, வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து திருவையாறு குற்றவியல் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினார்.
இந்நிலையில் தஞ்சை மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, சிகிச்சை பலனின்றி இறந்தார். மாணவியின் மரணத்திற்கு காரணமான பள்ளியை நிரந்தரமாக மூட வேண்டும், மதமாற்ற முயற்சி செய்த பள்ளி நிர்வாகிகள், விடுதி வார்டன், உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவர்களை போன்றவர்களால் மற்ற மாணவிகளின் நிலை கேள்வி குறியாகும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்பியுடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர், மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாணவியின், உடலை அவரது பெற்றோர், மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்தனர். பின்னர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பாஜகவினர் காவல்துறையை கண்டித்து மருத்துவ கல்லூரி வல்லம் சாலை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.