Tamilnadu Tableaux:குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகள் புறக்கணிக்கப்பட்ட விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு.. நீதிபதிகள் கூறியது என்ன?
டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு முன்பு வழக்கறிஞர் செல்வி ஜார்ஜ் ஆஜராகி முறையீடு செய்து தமிழக அலங்கார ஊர்திகள் இடம்பெற உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனைக்கேட்ட நீதிபதிகள் மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக விளக்கம் அளித்துள்ளனர்.
வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வஉசி, பாரதியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்ற தமிழக அரசின் அணிவகுப்பு வாகனம் நிராகரித்துவிட்டதை எதிர்த்து வழக்கறிஞர் பாபு என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.
குடியரசு தினத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் அனைத்து மாநிலத்தின் பண்பாடு கலாச்சாரம் மற்றும் விடுதலை போராட்டத்தை பறை சாற்றும் வகையில் போராட்ட வீரர்கள் அடங்கிய வாகன ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில், தமிழகம், கேரளா, மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்த வாகன ஊர்திகள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என மத்திய அரசு மறுத்துவிட்டது.
தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4 வது சுற்று வரை சென்ற நிலையில், வேலுநாச்சியார் வ உசி ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை என்றும் மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்க்கிறோம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஊர்திகள் இடம்பெற கோரிக்கை வைத்து பிரமருக்கு கடிதம் எழுதினார். ஆனால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தமிழ்நாடு ஊர்திகள் இடம்பெறாதது குறித்து காரணங்களை தெரிவித்துவிட்டோம். அதனால் அரசின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை என்று கூறியது.
இந்நிலையில் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்ட ஊர்வலத்தில் இடம்பெறும் என்றும் தமிழ்நாட்டின் அத்தனை முக்கிய நகரங்களுக்கும் மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.