TNCA President : முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய தலைவர்..!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக் சிகாமணி முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அமைச்சர் பொன்முடி மகனான அசோக் சிகாமணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அவருடன் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
போட்டியின்றி தேர்வு:
இந்திய கிரிக்கெட்டின் பழம்பெரும் சங்கங்களில் ஒன்றான தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக, அமைச்சர் பொன்முடியின் மகன், அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இன்று தேர்தல் நடைபெற இருந்த சூழலில், ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் போது, எதிர்த்துப் போட்டியிட்ட பிரபு, தமது வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், TNCA- எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்:
இந்தியாவின் பழம்பெரும் கிரிக்கெட் சங்கங்களில் ஒன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். கடந்த 1932-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இச்சங்கத்தின் "ஹோம் கிரவுண்ட்" என்பது சேப்பாக்கம் மைதானம் என செல்லமாக அழைக்கப்படும் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம். பல வரலாற்று மைல்கற்களைக் கொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தற்போது 90-வது ஆண்டில் இயங்கி வருகிறது. இந்தியாவின் பண பலம் படைத்த கிரிக்கெட் சங்கங்களில், TNCA-வும் ஒன்று என்றால் மிகையில்லை.
எதிர் தரப்பினர் வாபஸ்:
பணமும் பெருமையும் மிக்க TNCA-வின் தலைவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. தலைவர் பதவிக்கு விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய துணைத்தலைவராகவும் இருக்கும் அசோக் சிகாமணியும், அவரை எதிர்த்து பிரபுவும் போட்டியிட்டனர். இதில் அசோக் சிகாமணி, முன்னாள் தலைவரும் பலம் வாய்ந்த நிர்வாகியாகவும் அறியப்பட்ட இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் அணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விதிகளை மீறி அசோக் சிகாமணி உள்ளிட்ட சிலர் போட்டியிடுவதால், இத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டதால், இது சர்ச்சைக்குரிய தேர்தலாக மாறியது. இந் நிலையில், தமது வேட்புமனுவை பிரபு வாபஸ் பெற்றதால், போட்டியின்றி தலைவராகத் தேர்வானார் டாக்டர் அசோக் சிகாமணி.
முதலமைச்சரிடம் வாழ்த்து:
இன்று நடைபெற இருந்த தேர்தலில், TNCA-வில் உறுப்பினராக உள்ள 170-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதிப் பெற்று இருந்தனர். ஆனால், காலையில் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும் போதே, தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிரபு, தமது மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் ஆதரவுடன் போட்டியிட்ட டாக்டர் அசோக் சிகாமணி, போட்டியின்றி, தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து, அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். உதவி செயலாளர் மற்றும் இணை செயலாளர் பதவிகளுக்குப் போட்டியிட்டவர்களும் தங்களது வேட்புமனுவை, எந்தவொரு நிபந்தனையுமின்றி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அனைவரும் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர். துணைத் தலைவராக ஆடம் சேட், செயலாளராக ஆர்.ஐ. பழனி, இணை செயலாளராக கே. சிவக்குமார், உதவி செயலாளராக ஆர்.என். பாபா மற்றும் பொருளாளராக டி.ஜே. சீனிவாசராஜூம் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அசோக் சிகாமணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.