டெல்டா பிளஸ் கொரோனா : ஆய்வகங்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்..!
தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஆய்வகங்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
கவிஞர் கண்ணதாசனின் 94-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் அவரது உருவப்படத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, அமைச்சர் மா.சுப்ரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, சென்னையில் நேற்று டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடைய உற்றார். உறவினர்களை கண்காணிக்கும் பணியை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. முதல் அலைக்கும், இரண்டாவது அலைக்கும் வித்தியாசம் இருந்தது. இரண்டாவது அலையில் அதிகளவு நபர்கள் பாதிக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தோம். இப்போது, இந்த வைரசும் அதே போலதான் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் வந்துள்ளது. வெளிமாநிலங்களில் வந்துள்ளது. டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபருக்கு தொற்று இருப்பது ஓரளவு குறைவாகவே காணப்படுகிறது. ஆனாலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்தோம். அவர்கள் அனைவரும் நன்றாக உள்ளனர். அனைவருக்கும் நெகட்டிவ் என்று வந்துள்ளது.
இந்த வைரசை தற்போதுள்ள ஆய்வகங்களில் கண்டறிய இயலாது. இந்த வைரசை கண்டறிவற்கு பிரத்யேக ஆய்வகங்கள் உள்ளது. தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்களிலே இந்த புதிய வகை டெல்டா பிளஸ் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட உள்ளது.
இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் தடுப்பூசிகள் இந்த வைரஸ்களை கட்டுப்படுத்தி உள்ளது. இதுதொடர்பான ஆய்வுகளை மருத்துவ வல்லுனர்கள் மேற்கொள்ள இன்றைக்கு உத்தரவிடுவோம். டெல்டா பிளஸ் எப்படி அவருக்கு வந்தது? யார் மூலம் வந்தது? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். விமான நிலையத்தில் தற்போது கட்டுப்பாடுகள் உள்ளது. விமானப் போக்குவரத்து முழு அளவில் கொண்டுவரப்படும்போது, விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்படும்” என்று கூறினார்.
முன்னதாக, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில் தற்போது டெல்டா பிளஸ் எனப்படும் மிகவும் வீரியம் மிகுந்த கொரோனா வைரஸ் மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா மற்றும் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் நேற்று வந்த நபர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘டெல்டா உருமாறிய கொரோனா வைரஸ் மரபணு அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களால் 'டெல்டா பிளஸ் வகை வைரஸ் உருவானது. ஆனால், இது இந்தியாவுக்கு வெளியேதான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா நோய்த் தொற்றால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் முதன்முறையாக நேற்று ஒருவருக்கு டெல்டா பிளஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுநாள் வரையில், ‘டெல்டா பிளஸ்’ கொரோனாவின் தன்மை பற்றி யாருக்கும் தெரியாது. ஸ்பைக் புரதத்தில் K417N என்ற மாறுபாட்டை டெல்டா பிளஸ் கொண்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகையிலும் இத்தகைய வேறுபாடு காணப்பட்டது. ஆனால், ஏற்கனவே, அதிகம் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸுகளில் K417N உருமாற்றம் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றன. மேலும், K417N உருமாற்றம் கொரோனா தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கும் என மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, கொரோனா வைரஸ் அதன் ஸ்பைக் புரதங்களின் உதவியுடன் மனித உயிரணுக்களை பாதிக்கிறது. வைரஸின் ஸ்பைக் புரதம் மனித சுவாசக் குழாய் உயிரணுக்களின் மேற்பரப்பில் உள்ள ACE2 ஏற்பிகளுடன் பிணைத்துக் கொள்கிறது. வைரஸ் தொற்றியவுடன், வைரஸ் மரபணு மனித உயிரணுக்களில் நுழைந்து, வைரசின் ஆயிரம் பிரதிகள் வெறும் பத்து மணி நேரத்தில் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவான வைரஸ்கள் அருகிலுள்ள அணுக்களுக்கு குடியேறுகின்றன.
புதிய கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தைச் செயலிழக்கச் செய்தால் மட்டுமே தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க முடியும். இதனால் ஸ்பைக் புரதத்தில் உள்ள ஆன்டிஜென், தடுப்பூசிக்கு ஒரு முக்கியமான இலக்காகும். ஆன்டிபாடி ஸ்பைக் புரதத்தைத் தடுத்தால், வைரசால் அணுக்களில் நுழைந்து பல்கி பெருக முடியாது. தற்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட அநேக தடுப்பு மருந்துகளும் இந்த ஸ்பைக் புரதத்தை தங்கள் இலக்காக வைத்திருக்கின்றன. ஆனால், சார்ஸ்- கோவ்- 19 தனது ஸ்பைக் புரதத்தில் K417N, T478K, P681R and L452R போன்ற மாறுபாடுகளுடன புதிதாக உருவாகி வருகிறது.