TN Headlines: பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை ஒத்திவைப்பு;பக்ரீத் கொண்டாட்டம் - முக்கியச் செய்திகள்!
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
Bakrid 2024: பக்ரீத் கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இறைவனுக்காக பெற்ற மகனையே பலியிட முன்வந்த இப்ராஹிமின் தியாகத்தையும், இறைவனுக்காக தன்னையே பலிகொடுக்க முன்வந்த இஸ்மாயிலின் தியாகத்தையும் போற்றும் விதமாக தியாகப் பெருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ரூபாய் 3 கோடி வரையில் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பொள்ளாச்சி சந்தையில் மட்டும் சுமார் 1200 ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆடுகள் விற்பனை வர்த்தகம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கிடாக்கள் அதன் எடைக்கு ஏற்பவும், வகைக்கு ஏற்பவும் விலை மாறுபட்டது.
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்க வரும் 20ஆம் தேதி, பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு பயணம் செய்யவிருந்தார். ஆனால், தற்போது அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயிலை தினசரி ரயிலாக இயக்க ரயில் வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க வரும் 20ஆம் தேதி, பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு வரவிருந்தார்.ஒத்திவைக்கப்பட்ட பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கான மறுதேதி பின்னர் தெரிவிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதர் கோயிலில் திருவடி கோவில் புறப்பாடு: அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்..!
ஆனி மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவடி கோவில் புறப்பாடு வீதியுலா உற்சவம். பச்சை கரை மஞ்சள் பட்டு உடுத்தி மல்லிகைப்பூ, பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிந்து ஸ்ரீ தேவி,பூதேவி உடன் வீதி உலா வந்த வரதராஜ பெருமாள்.
நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியிலும் ஆவின் நிறுவனம் மகத்தான சாதனை!
நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியிலும் ஆவின் நிறுவனம் மகத்தான சாதனை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “கடந்த 22.7.2021 அன்று ஆவின் நிறுவனம் 43.05 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 32 ரூபாயிலிருந்து 35 ஆகவும், எருமைப் பாலின் விலை லிட்டருக்கு 41 ரூபாயிலிருந்து 44 ஆகவும், உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.“ என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்திற்கு சிறுத்தை வந்தது எப்படி?; வனத்துறையின் அதிர்ச்சி தகவல்
காடையாம்பட்டி மற்றும் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 8 மாதமாக அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக மக்கள் தெரிவித்து வந்தனர். சிறுத்தையைப் பிடிப்பதற்காக 12 இடங்களில் கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் மூன்று கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தை கடந்த ஒரு வாரமாக வனத்துறையால் வைக்கப்பட்ட எந்த கேமராவிலும் பதிவாகவில்லை.சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் நடமாடும் சிறுத்தை ஓசூர் மலைப்பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என வனதுறையினர் தெரிவித்து வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகை; விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் சிறப்பு தொழுகை
விழுப்புரத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நகராட்சி மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துக் கொண்டனர்.புத்தாடை அணிந்து தொழுகையில் கலந்துக்கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், திருக்கோயிலூர் என பல்வேறு இடங்களிலும் பக்ரீத் பண்டிகைகாகன சிறப்பு தொழுகை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - யாரெல்லாம் பங்கேற்கலாம்?
தனியார் துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் ‘வேலைவாய்ப்பு முகாம்” இம்மாதம் எதிர்வரும் 20.06.2024 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளதுமுகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.