"அரசின் குழந்தைகள்.." தாய், தந்தையை இழந்த 4 பிள்ளைகள்: அரசு வேலைக்கு உத்தரவு - படிப்பைத் தொடர நடவடிக்கை - அசத்திய தமிழக அரசு
கள்ளக்குறிச்சியில் தாய், தந்தையை இழந்து பரிதவித்த 4 குழந்தைகளுக்கும் போதிய உதவிகளை அளிக்க உத்தரவிட்டதுடன் அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் பேசினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே அமைந்துள்ளது சங்கராபுரம். இந்த மாவட்டத்தில் பூட்டை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் கமலக்கண்ணன். இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மகள்கள் லாவண்யா, ரீனா, ரீஷிகா மற்றும் மகன் அபினேஷ் ஆவார்கள்.
தாய், தந்தை மரணம்:
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வசந்தா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, தந்தை கமலக்கண்ணன் பராமரிப்பிலே 4 பேரும் வளர்ந்து வந்தனர். தாய் இறந்த பிறகு குடும்ப சூழல் காரணமாக மூத்த மகள் லாவண்யா தனது பொறியியல் படிப்பை முதலாம் ஆண்டிலே நிறுத்திவிட்டார். பின்னர், கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும், 10ம் வகுப்புடன் ரீனாவும், 8ம் வகுப்புடன் ரீஷிகாவும் படிப்பை நிறுத்திவிட்டனர்.
இந்த சூழலில், கல்லீரல் பாதிப்பால் கமலக்கண்ணன் கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். உயிரிழந்த அவரது உடலை அடக்கம் செய்வதற்கு போதுமான பணம் இல்லாமல் அவரது மகள்களும், மகனும் பரிதவித்துள்ளனர். அவர்களது பரிதாப சூழல் அறிந்த அந்த ஊர் மக்கள் உடனடியாக கமலக்கண்ணன் உடலை அடக்கம் செய்தனர்.
கை கொடுத்த முதலமைச்சர்:
தந்தை மற்றும் தாய் இருவரையும் இழந்துவிட்டு ஆதரவற்று நிற்கும் இவர்களது குடும்பத்தினருக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவுவதற்கு அமைச்சரையும், மாவட்ட நிர்வாகத்தினரையும் நேரில் அனுப்பினார்.
இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 17, 2025
🗞️ இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.
☀️ நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி,… https://t.co/y3Oor4mTLA
அரசின் பிள்ளைகள்:
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே அவர்கள் 4 பேரிடமும் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள். அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்.
இந்த செய்தியை காலையில் படித்ததுமே மாவட்ட ஆட்சியை அழைத்து அவர்களது தேவைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன். நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன். மாலை அமைச்சர் எ.வ.வேலுவும் நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது அரசு துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அரசு உதவி:
பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பேரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் எ.வ,வேலு மூத்த மகள் லாவண்யாவிற்கு தற்காலிக அரசு வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், படிப்பை பாதியிலே நிறுத்திய மாணவிகளுக்கு படிப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார்.





















