TN Weather Update: சென்னைவாசிகளே வீக்கெண்ட் ப்ளான் இருக்கா? வெயில் கொளுத்தப்போகுது.. வெதர்மேன் சொல்லும் தகவல்..
சென்னையில் இன்று அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை பதிவாகும் என தமிழ்நாட்டின் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை பதிவாகும் என தமிழ்நாட்டின் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது முதலே பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும் சென்னை, வேலூர், திருத்தணி, திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சூரியன் சுட்டெரிக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 41 முதல் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை:
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 42.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து கடலூர் – 40.3 டிகிரி செல்சியஸ், வேலூர் – 40.3 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் – 41.3 டிகிரி செல்சியஸ், நாகையில் – 39.2 டிகிரி செல்சியஸ், நாமக்கல் – 38 டிகிரி செல்சியஸ், பரங்கிபேட்டை – 39 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் – 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 42.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், நுங்கம்பாக்கத்தில் – 41.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜூன் மாதம் அதிகபட்சமான வெப்பநிலை நேற்று பதிவாகியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஜுன் 8 ஆம் தேதி 2014 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாகத்தில் 41.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது இன்று வெப்பநிலை அதிகமாக இருக்கும் என பிரதீப் ஜான் கூறியுள்ளார். அதாவது 43 டிகிரி செல்சியஸ் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் காரணத்தால் பகல் நேரங்களில் வெப்ப அலை வீசுகிறது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் எனவும் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.