TN Weather: சென்னையில் விடாமல் மழை.. 21 மாவட்டங்களில் வெளுக்கப்போது! உங்க ஊரில் வானிலை எப்படி?
தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிக்குள் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மோன்தா புயல் சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் நாளை ஆந்திராவின் மசிலிப்பட்டிணம் - கலிங்கப்பட்டிணம் இடையே காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது. இந்த மோன்தா புயல் காரணமாக ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு, ஒடிசா, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
சென்னையில் மழை:
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த சூழலில், சென்னையில் மாலை முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
21 மாவட்டங்களில் மழை:
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயல்:
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய முதலே தமிழ்நாட்டில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. மோன்தா புயல் தற்போது சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக அதிக பாதிப்பு ஆந்திராவிற்கே இருக்கும் என்றாலும் தமிழ்நாட்டிலும் மழைப்பொழிவு இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
கனமழை அபாயம்:
இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீட்டர் முதல் 100 கி.மீட்டர் வரை சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயார் நிலையில் சென்னை மாநகராட்சி:
சென்னையில் மோன்தா புயல் பாதிப்பு மழைப்பொழிவில் இருக்கும் என்று ஏற்கனேவ அறிவுறுத்தப்பட்டதால், மாநகராட்சி தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவேற 215 நிவாரண முகாம்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மோட்டார்பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள் உள்பட மாநகராட்சியின் அனைத்து தரப்பு பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வரும் நிலையில் சாலைகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றுவதற்கு ஏதுவாக சாலைகளின் ஓரத்திலே மோட்டார்பம்புகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.





















