Solar Panel Subsidy : மின் கட்டணத்திற்கு குட்பை.! Solar Panel அமைக்க ரூ.1 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு – விண்ணப்பிப்பது எப்படி?
Tamilnadu Solar Panel Subsidy : மின்சாரத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின் கட்டணம் தலை சுற்ற வைக்கும் வகையில் பல ஆயிரங்களில் வரும் நிலையில், Solar Panel அமைக்க ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைவது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.

நவீன காலத்திற்கு ஏற்ப மின்சார தேவையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் எந்த வேலையாக இருந்தாலும் மின்சாரம் இல்லாமல் செய்ய முடியாது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சமைப்பது முதல் துணி துவைப்பது என அனைத்திற்கும் மின்சாரத்தின் பயன்பாடு அதிகமாக தேவை உள்ளதால் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் மின் கட்டணத்தை பார்க்கும் போது தலை சுற்றவைக்கும். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டிய மின்கட்டணம் தற்போது 2000 ரூபாயை தாண்டி வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் மின் தேவைக்காக சூரிய ஒளி மின்சாரத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் பிரதமர் சூர்யா கர் திட்டத்தின் கீழ், வீட்டுக்கூரையின் மேல் சோலார் பேனல்களை அமைத்து 3 கிலோ வாட் வரையிலான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டத்திற்கு சுமார் ரூ. 78,000 வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசும் சூரிய ஒளி மின்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மாநில அரசின் கூடுதல் மானியத்தால் இந்த உதவித்தொகையானது ரூ. 1 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி தமிழக அரசின் சூரிய ஒளி மானிய திட்டத்தை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். 1 கிலோ வாட்டிற்கு ரூ.5,000 மானியமும், 2 கிலோ வாட்டிற்கு ரூ.10,000 மானியமும், 3 கிலோ வாட்டிற்கு மத்திய மற்றும மாநில அரசு இணையந்து அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை மானியம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு மக்களிடம் அதிகளவிலான வரவேற்ப்பின் காரணமாக இந்த திட்டம் தொடங்கிய 10 நாட்களில் 16,500 பேர் விண்ணப்பத்துள்ளனர். வரும் மார்ச் மாதத்துக்குள் 1 லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்புபவர்கள் https://www.tnebltd.gov.in/usrp/ என்ற இணையதளத்தை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யவும்
https://pmsuryaghar.gov.in/#அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
உங்கள் மாநிலமாகத் தமிழ்நாட்டைத் தேர்வு செய்யவும்.
மின்விநியோக நிறுவனத்தைத் தேர்வு செய்யவும்.
மின் நுகர்வோர் எண், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யவும்.
விண்ணப்பித்து ஒப்புதல் பெறவும்
மின் இணைப்பின் விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். மின்வாரியத்தின் தொழில்நுட்ப ஒப்புதல் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தைத் தேர்வு செய்யவும்
அரசால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரைத் தேர்ந்தெடுத்து, விதிமுறைகளுக்கு உட்பட்டு சோலார் பேனல்களை நிறுவ வேண்டும்.
நெட் மீட்டர் பொருத்துதல்
சோலார் பேனல் நிறுவப்பட்ட பிறகு, மின்வாரியத்தின் மூலம் நெட் மீட்டர் பொருத்தப்பட்டு ஆய்வு மற்றும் மின் இணைப்புக்கான ஒப்புதல் பெற வேண்டும்.
மானியத் தொகையைப் பெறுவது எப்படி.?
நிறுவல் மற்றும் மின்வாரியச் சரிபார்ப்பு முடிந்து, மத்திய அரசின் மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகு, தமிழக அரசின் கூடுதல் மானியத்திற்கான தகுதி சரிபார்க்கப்படும். மாநில இணையதளத்தின் தகவல்படி, இதற்குத் தனியாக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும்.
சோலார் பேனல் அமைக்க ஏற்ற வீட்டின் கூரை இருக்க வேண்டும்.
செல்லுபடியாகும் வீட்டு மின் இணைப்பு இருக்க வேண்டும்.
இதற்கு முன்பு இதே சோலார் அமைப்புக்கு வேறு அரசு மானியம் பெற்றிருக்கக் கூடாது.
தேவையான ஆவணங்கள்
மின் நுகர்வோர் எண்
ஆதார் உள்ளிட்ட அடையாள விவரங்கள்
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்
வங்கிக் கணக்கு விவரங்கள்
மானியப் பரிவர்த்தனைக்குத் தேவையான வங்கிச் சான்றுகள்.
ட்ரெண்டிங் செய்திகள்





















