நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
கட்டுமானப்பணி நிறைவடைந்த மருத்துவக்கட்டடங்களை திறந்துவைக்க உள்ள முதல்வர் சாலைவலம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்

நாளை மறுநாள் முதலமைச்சர் விஜய் திருச்சி சென்று வளர்ச்சித்திட்டங்களை தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதியன்று முதல்வர் திருச்சி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உயிரிழந்ததன் காரணமாக அந்தப்பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் திருச்சியில் கட்டுமானப்பணி நிறைவடைந்த மருத்துவக்கட்டடங்களை முதல்வர் திறந்துவைக்க உள்ளார்.
இடைத்தேர்தலை குறிவைக்கும் முதல்வர்?
2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற தவெக, காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இத்தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் இருதொகுதிகளிலும் வெற்றிபெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
மொத்தமாக காலியான 7 தொகுதிகளுள் இரு தொகுதிகளுக்கு இதுவரை இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் கொளத்தூர் எம்.எல்.ஏ உயிரிழந்த நிலையில் கூடிய விரைவில் அத்தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்படும். இடைத்தேர்தலை நோக்கி காய்களை நகர்த்தி வரும் முதல்வர் விஜய், கடந்த 3-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று, சாலைவலமும் வந்து மக்களை ஆரவாரப்படுத்தினார். இதனையடுத்து கடந்த 14-ஆம் தேதியன்று அம்பாசமுத்திரத்தில் பள்ளிவிழா ஒன்றிலும் பங்கேற்க திட்டமிட்டார்.
திருச்சி செல்லும் முதல்வர் விஜய்!
இதனைத்தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுள் ஒன்றான திருச்சி கிழக்கை மையப்படுத்தி திங்கட்கிழமையன்று நலத்திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்து ரோடுஷோ மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இன்னும் வரவிருக்கும் நாட்களில் மீதமுள்ள தொகுதிகளிலும் முதல்வர் விஜய் தீவிரக்கவனம் செலுத்தக்கூடும் எனவும் கருதப்படுகிறது
ட்ரெண்டிங் செய்திகள்























