"முழுக்க முழுக்க பொய்" வெளிநடப்பு செய்த எடப்பாடி - வெளுத்து வாங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு
ஜெயலலிதா பெயரிலான மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட்டதாக கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர்:
சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்தும், 10 மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
அப்போது ஜெயலலிதா பெயரிலான மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட்டதாக கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததற்கு அதிமுகவை விமர்சித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்படும்.
"அதிமுக வெளிநடப்பு செய்ததற்கு இதுதான் காரணம்"
மற்ற மாநிலத்துக்கும் தலையாய மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். தீர்மானம் நிறைவேற்றப்படும்போது அவையில் இருக்கக் கூடாது என்பதற்காகவே அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
பெயர் அளவில் ஒரு காரணத்தை கூறி அதிமுக வெளிநடப்பு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பெயர் மாற்றப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய்.
2012இல் உருவாக்கப்பட்ட மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு 2020இல் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டது. மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதாவின் பெயரை சூட்டுவதற்கான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. ஜெயலலிதா பெயரை சூட்டுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெற அப்போதைய அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்:
ஆளுநர் ஒப்புதல் தராததால் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை. அதிமுக அரசு அனுப்பி ஆளுநர் நிராகரித்த மசோதாக்களையும் இப்போது மீண்டும் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் சூட்ட ஆளுநர் ஒப்புதல் தராததால் அதற்கு முன் இருந்த பெயரிலேயே மசோதா கொண்டு வரப்பட்டது.
மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயரை சூட்டுவதற்கான மசோதாவையும் இன்று மீண்டும் நிறைவேற்றி உள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல். கூட்டணி முறிந்தாலும் அதிமுக - பாஜக இடையே ரகசியத் தொடர்பு உள்ளது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றார்.