Fact Check: அரசின் இலவச லேப்டாப் திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்; தீயாய் பரவிய தகவல்; உண்மை என்ன.?
அரசின் இலவச மடிக்கணினி(லேப்டாப்) திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படுவதாக சமீபத்தில் தகவல் பரவியது. அதன் உண்மை தன்மை குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மடிக்கணினி(லேப்டாப்) திட்டத்தில் சேர, ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படுவதாக சமீபத்தில் ஒரு தகவல் தீயாய் பரவியது. இந்நிலையில், அந்த தகவலின் உண்மை தன்மை குறித்து, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
இலவச லேப்டாப் குறித்து இணையத்தில் வெளியான தகவல்
தமிழ்நாட்டில் மாணவர்கள் பயன்பெறும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற செய்தி, சமீபத்தில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
அந்த செய்தியின்படி, “தமிழ்நாடு இலவச மடிக்கணினி திட்டம் 2025 விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியுள்ளது. எங்கள் திட்டம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும், சொந்தமாக - மடிக்கணினி வாங்க முடியாத, ஆனால் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த மடிக்கணினி தேவைப்படும் நபர்களுக்கு திறந்திருக்கும்.
விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளன.! விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே தங்கள் மடிக்கணினிகளைப் பெறத் தொடங்கிவிட்டனர். காலக்கெடு: 11/22/2025'' என கூறப்பட்டிருந்தது.
அதோடு, திட்டத்தில் பதிவு செய்யுங்கள் என லிங்க் ஒன்றும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. இந்த செய்தியை பார்த்த பலரும் ஆர்வத்துடன் பயனாளர்களாக சேர லிங்க்கை கிளிக் செய்தனர்.
இணையத்தில் பரவும் தகவல் உண்மை இல்லை என அறிவித்த அரசின் தகவல் சரிபார்ப்பகம்
இந்த நிலையில், இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், இது முற்றிலும் தவறான தகவல் என்றும் இணையத்தில் வெளியான இந்த தகவல் உண்மையில்லை, அது போலி செய்தி என்றும் கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாடு இலவச லேப்டாப் திட்டத்தில் சேர விண்ணப்பம் என்று பரவும் போலி செய்தி !@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/K4hcZy8o9N
— TN Fact Check (@tn_factcheck) November 20, 2025
தவறான லிங்க்குகளை கிளிக் செய்து பொதுமக்கள் எந்த இழப்பையும் சந்திக்கக் கூடாது என்பதற்காக, அரசு இந்த உண்மையை வெளியிட்டுள்ளது.





















