உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்!
தூத்துக்குடியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியை திமுக எம்.பி. கனிமொழி புறக்கணித்ததாக தகவல்கள் பரவி வருகின்றன.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் கனிமொழி கலந்து கொள்ளவில்லை. உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியை கனிமொழி புறக்கணித்ததாக தகவல்கள் பரவி வருகின்றன.
விஜய்யின் அரசியல் வருகையால் தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த இரண்டு வாராங்களாக ஒட்டுமொத்த கவனமும் தவெக மீது இருந்த நிலையில், தற்போது அது திமுக பக்கம் மீண்டும் திரும்பியுள்ளது.
உதயநிதி vs கனிமொழி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி அங்கு சென்றிருந்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திலும் சரி நிகழ்ச்சிகளிலும் சரி கனிமொழி கலந்து கொள்ளவில்லை. ஏன்கனவே, திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் அதிகார போட்டி நிலவி வருவதாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், கனிமொழி குறித்து கேட்டதற்கு, "நான் இங்கு வரும்பொழுது கனிமொழி எம்.பி.யிடம் பேசிவிட்டு தான் வந்தேன். அவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அதனால், அவர் கலந்து கொள்ள இயலவில்லை. மற்றொரு நாள் இன்னொரு நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து கலந்து கொள்கிறோம்" என்றார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் என்ற அடையாளத்தையும் தாண்டி, கொள்கைகளில் தீவிரமாக இருப்பவர், கட்சியனர் மற்றும் பொது மக்களை எளிதில் அணுகக்கூடியவர் என்ற இமேஜை கொண்டிருப்பவர் கனிமொழி.
திமுகவில் சலசலப்பு:
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, கனிமொழி ஓரங்கட்டப்படுவதாக திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. கருணாநிதியின் அரசியல் வாரிசாக கனிமொழி கருதப்பட்டாலும், கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கான முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என அவரது ஆதரவாளர்கள் குமுறி வருகின்றனர்.
கருணாநிதி காலத்தில் திமுகவின் டெல்லி முகமாக முரசொலி மாறன் இருந்தது போல், ஸ்டாலின் முதலமைச்சரான நிலையில், திமுகவின் டெல்லி முகமாக கனிமொழி உருவெடுத்தபோதிலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாத காரணத்தால் அதிகாரம் இன்றி இருக்கிறார் கனிமொழி.
அதேபோல, கட்சியிலும் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். எனவே, அவர் மாநில அரசியலுக்கு திரும்ப வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிக்க: சூர்யாவின் கங்குவா படம் எப்படி இருக்கு?