Stalin 30/30 : ஸ்டாலின் ஒரு மாத ஆட்சியும் பெண்களுக்கான முக்கியத்துவமும்!
அதுவரை ஆட்சியில் இருந்த அதிமுகவின் பிரதான வாக்கு வங்கியாக ஜெயலலிதாவுக்கான மகளிர் வாக்கு வங்கிகள் இருந்த நிலையில் அந்த வாக்குவங்கிகளைத் தனதாக்கிக் கொள்ளும் வகையில் திராவிட முன்னேற்றக்கழக அரசின் மகளிர் உரிமை அறிவிப்புகள் சிறந்த அரசியல் காய் நகர்வாக அமைந்தது.
புதிதாகப் பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 30 நாட்களுக்கான ரிப்போர்ட் கார்டுகள் வெளிவந்துள்ளன. கொரோனா பேரிடர் கையாளுதல் முதல் பலதுறைகளுக்கு டிஸ்டிங்க்ஷன் கொடுக்கப்பட்டுள்ளன. பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்த ஒருமாதகால ஆட்சி சிறப்பாகவே உள்ளதாக நற்சான்றிதழ் அளித்துள்ளன. இந்த நிலையில் பெண்ணுரிமையும், சமூகநீதியும் தார்மீகக் கொள்கையாகக் கொண்ட திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆட்சி இந்த ஒரு மாதகாலத்தில் மகளிர்க்காக என்ன செய்துள்ளது என்பதை ரீவைண்ட் செய்வோம்.
2021க்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பிரதான அம்சமாக மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ரேஷன் பொருட்கள் வாங்கும் குடும்பப்பெண்களுக்கு மாதாந்திர உரிமைத்தொகையாக 1000/- ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதுவரை ஆட்சியில் இருந்த அதிமுகவின் பிரதான வாக்கு வங்கியாக ஜெயலலிதாவுக்கான மகளிர் வாக்கு வங்கிகள் இருந்த நிலையில் அந்த வாக்குவங்கிகளைத் தனதாக்கிக் கொள்ளும் வகையில் திராவிட முன்னேற்றக்கழக அரசின் மகளிர் உரிமை அறிவிப்புகள் சிறந்த அரசியல் காய் நகர்வாக அமைந்தது.
7 மே 2021ல் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஆட்சிப்பொறுப்பேற்ற நிலையில் அமைச்சரவை துறைவாரியாகப் பெயர் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அதில் அமைச்சர் கீதா ஜீவன் பொறுப்பிலான மகளிர்நலத்துறைக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் முதல்நாள் முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். இதன்படி தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் உள்ளடக்கிய மகளிர் அனைவரும் கட்டணமில்லாமலும் பயண அட்டை இல்லாமலும் பயணிக்கலாம். இத்துடன் கொரோனா பேரிடரில் காலத்தில் கர்ப்பிணித்தாய்மார்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருவள்ளுர் மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பிரத்யேக கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்த 30 நாட்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம், காவல்துறை ஐ.பி.எஸ். பணியிடமாற்றம் உட்பட பல அரசு பொறுப்புகளில் பெண்கள் முன்னிலைபடுத்தப்பட்டிருக்கின்றனர். முக்கியமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத்திட்டமான ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்த ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார்.
முதலமைச்சராகப் பதவியேற்றபின், தேர்தல் பரப்புரையின்போது தான் பெற்ற மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் விதமாக ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்கிற சிறப்புத்துறையை உருவாக்கினார் ஸ்டாலின். அவரது முதல்நாள் முதல் கையெழுத்தில் ஒரு அம்சமாக இந்தத் துறைக்கான சிறப்பு அதிகாரி நியமனமும் இருந்தது. தலைமைச் செயலகத்தில் சிறப்பு அலுவலகமாக இந்தத்துறை இயங்குகிறது. இந்தப் பொறுப்பில்தான் தற்போது ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் பணியாற்றி வருகிறார். இந்தத் துறையின் கீழ் பெறப்பட்ட சுமார் 4 லட்சம் மனுக்களில் 70000 மனுக்கள் தற்போது சிறப்பு எண் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் மாவட்ட ஆட்சியரால் நடவடிக்கை எடுக்கப்பட்ட 169 புகார்களில் பெண்கள் 20 பேர் வரை பயனடைந்துள்ளனர்.
இதுதவிர நான்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் திருச்சி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட முக்கியச் சரகங்களுக்கு டி.ஐ.ஜியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.இதன்படி சென்னை தலைமைச்செயலக டி.ஐ.ஜியாக இருந்த மகேஸ்வரி ஐ.பி.எஸ். சேலம் சரக டி.ஐ.ஜி.,யாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜிலன்ஸ் மற்றும் லஞ்சஒழிப்புத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ராதிகா ஐ.பி.எஸ்., திருச்சி சரக டி.ஐ.ஜியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த சாமுண்டீஸ்வரி ஐ.பி.எஸ்., சென்னை பெருநகரக் காவல்துறை தலைமையகத்தின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
Also Read:49 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் : 14 பேருக்கு பதவி உயர்வு