பொத்தாம் பொதுவா சொல்லாதீங்க! முதலில் இதை செய்யுங்க! – வானதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் மதவாதம் எங்கு இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்லுங்கள் என வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

தமிழ்நாட்டில் மதவாதம் எங்கு இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்லுங்கள் என வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அதன்படி தமிழ்நாட்டில் மத பயங்கரவாத சம்பவங்களை குறைக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தினார். 1998ஆம் ஆண்டு கோவையில் காரில் குண்டு வெடித்த சம்பவத்தை குறிப்பிட்டு வானதி சீனிவாசன் பேசினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின் “தமிழ்நாட்டில் மதபயங்கரவாதம் எங்கு இருக்கிறது? எந்த சூழலில் இருக்கிறது என்பதை வானதி குறிபிட்டு சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக கூறாதீர்கள். கோவையில் குண்டு வெடித்தது உண்மைதான். ஆனால் உடனடியாக அமைதி நிலைநிறுத்தப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
வானதி சீனிவாசன் பேசுகையில் ஆடிட்டர் ரமேஷ் கொலை பற்றி பேசினார். அந்த கொலை அதிமுக ஆட்சி காலத்தில் நடந்தது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
காஷ்மீர் போன்று தமிழ்நாட்டில் நடைபெறாது. காஷ்மீர் பற்றி பேசும்போது கூட நாங்கள் ஒன்றிய அரசின் பாதுகாப்பு குறைபாடு பற்றி பேசவில்லை. காஷ்மீர் விஷயத்தை கேள்விபட்டதும் நாங்கள் சொன்ன வார்த்தை காஷ்மீர் பிரச்சினையை பொறுத்தவரை ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என்றுதான் சொன்னோம்.
தமிழ்நாட்டில் எந்த ரூபத்திலும் மதவாதம் உள்ளே நுழைய முடியாது” எனத் தெரிவித்தார்.
மேலும், ”ஒன்றிய அரசிடம் பேசி தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை பெற்றுத்தர வானதி குரல் கொடுக்க வேண்டும் என இந்த மன்றத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.” என முதல்வர் பேசினார்.
இதையடுத்து அவையில் வானதிக்கு பேச அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் முழக்கம் இட்டனர். அப்போது என்ன திடீரென வானதி மேல் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாசம் என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த வானதி அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு நான் சகோதரி. அவர்கள் தங்கள் சகோதரிக்காக பேசக்கூடாதா என வானதி கேள்வி எழுப்பினார்.






















