ADMK: ஈபிஎஸ், ஓபிஎஸ்..! யார் வசம் அதிமுக? பொதுக்குழு தொடர்பாக இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வருகிறது.
அதிமுக இரட்டை தலைமை விவகாரம்:
அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொதுக்குழுவுக்கு எதிராக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்டார். ஆனால் அதை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய, மனுவை விசாரித்த நீதிபதிகள் இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர்.
உச்சநீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ்:
பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என இபிஎஸ் தரப்பு கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. அதைதொடர்ந்து, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஓபிஎஸ் மனு தொடர்பாக பதில் அளிக்கும் படி ஈபிஎஸ் தரப்புக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.
ஈபிஎஸ் பதில் மனு:
நீதிமன்ற நோட்டீசுற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நலனை கருத்தில் கொண்டே ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டதாக விளக்கமளித்தார். அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சி விதிகளை ஓ.பன்னீர் செல்வம் மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் எந்த நிவாரணமும் பெற ஓ.பன்னீர் செல்வம் தகுதியற்றவர் எனவும் ஈபிஎஸ் பதில் மனுவில் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு நடத்ததான் ஓபிஎஸ் தடை கேட்டாரே தவிர, அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் கேட்கவில்லை. எனவே ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுக்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஈபிஎஸ் வலியுறுத்தினார்.
6ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணை:
கடந்த 6ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு வரும் 12ம் தேதிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த காலகட்டத்திற்குள், ஈபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் என்ன நிவாரணத்தை எதிர்பார்க்கிறீர்கள், அதுதொடர்பாக என்னென்ன விவரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அதுதொடர்பான பதில் மனுவில், தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் எந்நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம். அப்படி நடந்தால் ஓபிஎஸ் தரப்பு அதிமுக பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ கேட்டு கட்சிப் பணிகளில் எந்தவித இடையூறையும் ஏற்படுத்தக்கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட சட்ட விதி மாற்றங்களை பதிவேற்றம் செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவும் ஈபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது.
இன்று மீண்டும் வழக்கு விசாரணை:
தொடர்ந்து 12ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு நிலுவையில் இருப்பதன் காரணமாக பல்வேறு பணிகள் முடங்கியுள்ளதாக ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டவிதி மாற்றங்களை தேர்தல் ஆணையமும் பதிவு செய்யாததல், தேர்தல் ஏதேனும் அறிவிக்கப்பட்டால் பெரும் சிக்கல் ஏற்படும் எனவும் வாதிடப்பட்டது. ஆனால், ஈபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை விசாரிக்கக் கூடாது என ஓபிஎஸ் சார்பில் வாதிடப்பட்டது. இதனிடையே, நீதிமன்றத்தின் அலுவல் நேரம் முடிவடைந்ததால் வழக்கு விசாரணை 15ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது. அதன் முடிவில், இடைக்கால உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினரிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.