Sundar Pichai Property: சென்னையில் இருந்த குடும்ப சொத்தை விற்ற கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை.. வாங்கிய நடிகர் யார் தெரியுமா?
கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, சென்னையில் இருந்த தனது குடும்ப சொத்தை தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் ஒருவருக்கு விற்றுள்ளார்.
கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, சென்னையில் இருந்த தனது குடும்ப சொத்தை தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் ஒருவருக்கு விற்றுள்ளார்.
வீட்டை விற்ற சுந்தரின் தந்தை:
கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் குடும்பத்திற்கு சொந்தமாக, சென்னை அசோக் நகரில் இருந்த வீட்டை, கோலிவுட்டில் சிறுபட தயாரிப்பாளரும், நடிகருமான மணிகண்டன் என்பவர் வாங்கியுள்ளார். அங்கு வில்லா ஒன்றை கட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் விவரம்:
தமிழ்நாட்டின் மதுரையில் ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி தம்பதிக்கு பிறந்த சுந்தர் பிச்சை. அதைதொடர்ந்து அவர்களது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்த நிலையில், அசோக் நகரில் ரகுநாத பிச்சை சொந்த வீடு ஒன்றை வாங்கினார். அங்கு வளர்ந்து, பள்ளிப்படிப்பை முடிந்த பின்பு கரக்பூர் ஐஐடியில் மேற்படிப்பை பூர்த்தி செய்தார். தொடர்ந்து 2004ம் ஆண்டு கூகுளில் பணிக்கு சேர்ந்த சுந்தர் பிச்சை, தற்போது தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் தான், சென்னையில் இருந்த வீட்டை சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை விற்பனை செய்துள்ளார்.
சுந்தர் பிச்சையின் குடும்பத்தை பாராட்டிய மணிகண்டன்:
ரகுநாத பிச்சை வீடு விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான சி. மணிகண்டன் உடனடியாக அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 4 மாத முயற்சிகளுக்குப் பிறகு ஒருவழியாக வீடு வாங்குவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய மணிகண்டன் ”முதன்முறையாக ரகுநாதனை சந்தித்தபோது தான் சுந்தர்பிச்சையின் தந்தை என்ற எந்தவொரு அலட்டலும் இன்றி, எளிமையாக நடந்து கொண்டார். அவரது மனைவி எனக்கு பில்டர் காபி போட்டுக்கொடுத்தார். ஆவணங்களை பெற்று சரிபார்த்தபிறகு, பத்திர பதிவு அலுவலகத்திற்கு நிதானமான காத்திருந்து முழு பணிகளையும் முடித்துக்கொடுத்தார். எந்தவொரு சூழலிலும், தனது மகன் தான் சுந்தர் பிச்சை என்ற விவரத்தை எங்குமே அவர் பயன்படுத்தவில்லை” என குறிப்பிட்டார். சுந்தர் பிச்சையின் வீடு இருந்த இடத்தில், புதியதாக வில்லா ஒன்று கட்ட மணிகண்டன் முடிவு செய்துள்ளார். இதனிடையே, பத்திரப்பதிவு முடிந்து அனைத்து ஆவணங்களையும் மணிகண்டனிடம் வழங்கும்போது, சுந்தர் பிச்சையின் தந்தை மனமுடைந்து அழுததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் செட்டிலான சுந்தர் குடும்பம்:
சுந்தர் பிச்சை கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றதை தொடர்ந்து, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா எனும் பகுதியில் சொந்தமாக பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளார். லாஸ் அல்டோஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வீடு, மலை உச்சியில் 31.17 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்து அமைந்துள்ளது. இந்த வீட்டை 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து சுந்தர் பிச்சை வாங்கியதாக கூறப்படுகிறது. இவரது ஆண்டு வருமானம் மட்டும் 226 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.