Kiran Bedi: "மக்களின் ஆளுநர்"- நூல் வெளியீட்டு விழாவில் கிரண் பேடி அதிரடி பேச்சு
இளைஞர்களை அரசு அலுவலகங்களுக்கு பயிற்சிக்கு செல்லும் போது அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சம் போன்ற செயல்கள் தவிர்க்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் "மக்களின் ஆளுநர்" புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கிரண் பேடி மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் கலந்து கொண்டனர்.
பெங்களூரில் சட்டக் கல்லூரியில் படித்து வரும் கிருத்திக் என்ற மாணவன் "மக்களின் ஆளுநர்" என்ற தலைப்பில் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கிரண் பேடி ஆளுநராக இருந்தபோது அவரது நடவடிக்கைகள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் கிரண் பேடி, முதல் பெண் ஐபிஎஸ் ஆனது முதல், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக பணியாற்றியது இதுவரை அவர் கடந்து வந்த பாதைகள் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளதாகவும், திகார் சிறையில் பணியாற்றிய போது கைதிகளை படிக்க வைத்து அவர்களுள் இருந்து தன்மையினை மாற்றி கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தியது போன்ற முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உடனான கிரண் பேடியின் சந்திப்பு, புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக பணியாற்றியபோது நடைபெற்ற நடவடிக்கைகள், ஆளுநர் அலுவலகத்தில் பயிற்சி மாணவனாக இருந்தபோது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து இந்த புத்தகத்தில் எழுதி உள்ளதாக அதன் ஆசிரியர் கிருத்திக் கூறியுள்ளார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கிரண் பேடி, "அரசாங்கத்திற்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அரசு அலுவலகங்களில் மாணவர்களுக்கு பயிற்சி எடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஒரு தெளிவு கிடைக்கும்" என்று கூறினார்.
மேலும் "இங்கு பொறியியல் கல்லூரிகள் அதிக அளவில் காத்திருக்கின்றன. பொறியியல் படிப்பு படிக்கக்கூடிய மாணவர்களை படித்துக் கொண்டிருக்கும் போது பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பயிற்சி எடுக்க வேண்டும். இதேபோல் ஆசிரியர் பயிற்சி எடுக்கக் கூடியவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்று தரும் வகையில் பயிற்சி அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருக்கக்கூடிய என்.எஸ்.எஸ், என்.சி.சி மாணவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் பயிற்சி எடுத்து இக்கட்டான நிகழ்வுகளில் எப்போது காவல்துறை கையாள வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட வேண்டும்" என்றார்.
மேலும், "மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கையில் தனியார் நிறுவனங்களில் மாணவர்கள் பயிற்சி எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் மாணவர்களுக்கு இது போன்ற புதிய பயிற்சிகளை வழங்க வேண்டும். நான் புதுவை மாநிலத்தின் ஆளுநராக இருந்தபோது ஆளுநர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினேன். இதன் பயன் என்னவென்றால், மாணவர்கள் நேரடியாக ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை தெரிந்து கொண்டார்கள். இந்தியாவில் உள்ள இளைஞர்களை அரசாங்க அலுவலகத்தில் பயிற்சி எடுக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்து அவர்களையும் ஒரு தலைவர்களாக உருவாக்க வேண்டும் என எண்ணினேன்.
எந்தவித ஒளிவுமறைவு இன்றி மாணவர்களுக்கு அரசு உயர் அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாக கண்காணித்தனர். இதுபோன்று இளைஞர்களை அரசு அலுவலகங்களுக்கு பயிற்சிக்கு செல்லும் போது அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சம் போன்ற செயல்கள் தவிர்க்கப்படும். இளைஞர்கள் நேரடியாக அரசு அலுவலகங்களை பார்த்துக் கொண்டிருப்பதால் அங்கு நடைபெறும் ஊழல்கள் தவிர்க்கப்படும். அப்போதுதான் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அரசு அதிகாரிகள் சரியாக செய்வார்கள்" என்று கிரண் பேடி கூறினார்.