Tamilnadu Fishermen: தமிழக மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கைது.. இலங்கை கடற்படை சொல்லும் காரணம் இதுதான்..!
கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடலோர மாவட்டங்களில் இருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது என்பது தொடர்கதையாகவே உள்ளது.
புதுக்கோட்டை மீனவர்கள் கைது:
அந்த வகையில் புதுக்கோட்டையில் இருந்து 4 படகுகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இலங்கை கடற்பகுதி அருகே நெடுந்தீவு பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை வீரர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச்சென்று இலங்கை கடற்படையினர், விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்களின் 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
தொடரும் அட்டூழியம்:
தொடர்ந்து, மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக மற்றும் மத்திய அரசால் பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் குறையவில்லை. அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது, மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கி அடித்து விரட்டி அடித்தனர். இதேபோல், கடந்த 17ம் தேதி ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றபோது, 14 தமிழக மீனவர்களை கைது செய்து ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்கள் கோரிக்கை:
இலங்கை அரசின் தொடர் வன்முறை சம்பவங்களை தடுக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நிரந்த தீர்வு காண வேண்டும் என தமிழக மீனவர்கள் நீண்ட காலமாக தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர். அதோடு, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், இலங்கை கடற்படை வசம் உள்ள தங்களது விசைப்படகுகளையும் மீட்டு, தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதலமைச்சர் கடிதம்:
அண்மையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்து தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் 100 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.