SIR in TamilNadu: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் அடுத்த வாரம் தொடங்கும்: தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த வாரம் இங்கு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், அதற்கான பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் SIR
தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக சென்னை உயர்நிதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாட்டில் அடுத்த வாரம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பீகார் SIR-ல் நடந்தது என்ன.?
பீகாரில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில், முன்னதாக அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அப்போது பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதில், அம்மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. நீக்கப்பட்டவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது அந்த முகவரியில் அவர்கள் இல்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து இருப்பதாகவும், அதன் காரணமாகவே நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தொரிவித்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானது.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை உச்சநிதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முந்தைய விசாரணையின்போது, பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க, உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த சூழலிலும், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படியே தற்போது தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் ஏராளமானோர் வசிப்பதால், இங்கும் வாக்காளர் பட்டியலில் குழப்பம் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.





















