SETC Volvo Bus: அடி தூள்.. இனி அரசு பஸ்லயே படு சொகுசா போகலாம்; வந்துடுச்சு வோல்வோ - எப்போதிலிருந்து இயக்கம்.?
பொதுமக்களின் சொகுசுப் பயணத்திற்காக, பொங்கல் பண்டிகைக்குள் 20 புதிய வோல்வோ பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

என்னதாக தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வந்தாலும், அரசுப் பேருந்தை பயன்படுத்தும் பொதுமக்களும் அதிகமாகத் தான் உள்ளனர். இந்நிலையில், அவர்களின் சொகுசான பயனத்திற்காக, புதிதாக 20 வோல்வோ பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்குள் அரசு வோல்வோ பேருந்துகள்
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், முதல் முறையாக 20 வோல்வோ மல்டி ஆக்சில் சொகுசுப் பேருந்துகள், பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.
ஏற்கனவே, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில், அன்றாடம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், முதல் முறையாக 20 வோல்வோ மல்டி ஆக்சில் சொகுசுப் பேருந்துகளை இயக்க உள்ளதாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டசபையில் ஏற்கனவே அறிவிப்பு
இந்த சொகுசுப் பேருந்துகள் தொடர்பாக, சட்டசபையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு பேருந்தும் 1.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான கொள்முதல் ஆணை வோல்வோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
வோல்வோ பேருந்தின் வசதிகள் என்ன.?
இந்த வோல்வோ மல்டி ஆக்சில் பேருந்து 15 மீட்டர் நீளம் கொண்டது. இதனால், வழக்கமான பேருந்தை விட இந்த பேருந்து பெரியதாக இருக்கும். ஒரே நேரத்தில் 51 பேர் இந்த பேருந்தில் பயணம் செய்ய முடியும்.
மல்டி ஆக்சிலுடன் ஏர் சஸ்பென்ஷன் கொண்ட இந்த பேருந்தில் பயணிகள் அதிர்வுகள் இல்லாமல் பயணிக்கலாம். ஏசி வசதி, சொகுசான படுக்கை வசதி, மொபைல் போன் சார்ஜிங் வசதி, வை-பை வசதி, பயணிகளுக்கு தனிப்பட்ட படிப்பதற்கான விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இந்த பேருந்தில் இருக்கும்.
தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள இந்த வோல்வோ மல்டி ஆக்சில் பேருந்துகள், பொங்கல் பண்டிகையின் போது, பயணிகளுக்கு பொங்கல் பரிசு போல் இயக்கப்பட உள்ளதாக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த வோல்வோ சொகுசுப் பேருந்தில் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வதை பயணிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.




















