முதல்வர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பது மாநில உரிமையை பறிகொடுக்கும் செயல் - சீமான் கண்டனம்
ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தி.மு.க. அரசு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பது மாநில உரிமையை பறிகொடுக்கும் செயல் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுவிக்கக்கோரி குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதியிருக்கும் தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. ஆளுநரின் ‘குடியரசுத்தலைவருக்குத்தான் அதிகாரமிருக்கிறது’எனும் மோசடி வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கடிதமெழுதி விடுதலையைக் கோரும் தி.மு.க. அரசின் செயல், மாநில உரிமையை மத்திய அரசிடம் பறிகொடுக்கும் செயல்.
எழுவரையும் விடுவிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரமிருக்கிறது எனப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமே தெளிவாக வரையறுத்து வழிகாட்டியிருக்கும் நிலையில், விடுதலைக்கு உத்தரவிட்டு மாநிலத்தின் தன்னுரிமையை நிலைநாட்ட வேண்டிய தமிழக அரசு, ஆளுநரின் கூற்றை முழுமையாக ஏற்றுக்கொண்டது போல குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதியிருப்பது, மாநிலத் தன்னாட்சியுரிமையைக் காவு கொடுக்கும் கொடுஞ்செயல். இது மிகப்பெரிய ஏமாற்றுவாதம்.
தமிழக அரசு குடியரசுத்தலைவரிடம் கடிதம் எழுதி வேண்டுகோள் வைப்பது மாநில அரசுக்கிருக்கும் அதிகாரத்தைத் தாரைவார்ப்பதற்கு ஒப்பாகும். 161-வது சட்டப்பிரிவு எனும் பொன்னான வாய்ப்பிருக்கும்போது எதற்காகக் குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதும் நடவடிக்கை?
மீண்டுமொருமுறை அமைச்சரவையை கூட்டி 161வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி விடுதலையை வழியுறுத்தலாமே? அல்லது 1982, சட்டத்தின் விதி 40ஐ பயன்படுத்தி, மாநில அரசாங்கத்தின் சிறப்பு அதிகாரமான விடுப்பு அளிக்கும் உரிமையில் எழுவருக்கும் காலவரையற்ற விடுப்பு வழங்கியிருக்கலாமே? அ.தி.மு.க. அரசு அதனைச் செய்யத் தயங்கியதென்றால், அதில் வியப்புக்கு இடமில்லை. ஆனால், தி.மு.க. அரசு அதனைச் செய்யாது கடிதமெழுதுவது ஏன்?
2014-ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் எழுவரையும் விடுவிக்கப்போவதாக தமிழக சட்டப்பேரவையில் அறிவித்து, குற்றவியல் நடை முறைச்சட்டம் 435-ஐப் பயன்படுத்தி, 3 நாட்கள் அவகாசம் கொடுத்து மத்திய அரசிடம் கருத்துகோரினார். அத்தகைய சட்டவிதிப் பின்பற்றலைத் தவறெனச் சுட்டிக்காட்டிய ஐயா கருணாநிதி அவர்கள், 161 எனும் அரசியல் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி எவரையும் கேட்காது விடுதலைசெய்ய மாநில அரசுக்கு முழு அதிகாரமிருக்கும்போது, வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு ஏன் அலைகிறீர்கள்? எனக் கேட்டார். இன்றைக்கு அவரது மகனே வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக குடியரசுத்தலைவரை நாடியிருப்பது வரலாற்றுப் பெருங்கொடுமையாகும்.
ஆகவே, தங்களுக்கிருக்கும் 161வது சட்டப்பிரிவு எனும் வலிமையான அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டுமொருமுறை அமைச்சரவையைக் கூட்டி, அளுநரை கண்டித்தும், அதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்., இந்த இடைபட்ட காலத்தில் 1982, சட்டத்தின் விதி 40ஐ பயன்படுத்தி, மாநில அரசாங்கத்தின் சிறப்பு அதிகாரமான விடுப்பு அளிக்கும் உரிமையில் எழுவருக்கும் காலவரையற்ற விடுப்பு வழங்க வேண்டும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அவ்விடுதலையைச் சாத்தியப்படுத்தும்பட்சத்தில், அத்தனை நெருக்கடிகளையும் எதிர்கொள்ள தி.மு.க. அரசுக்குத் துணையாக நிற்போம்” என்று கூறியுள்ளார்