Lok Sabha Election 2024:ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்கள் அறிமுகம் - அதிரடி காட்டிய சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் வரும் சனிக்கிழமை அறிமுகம் செய்யப்படுவார்கள் என சீமான் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் வரும் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல்:
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வருகிறது.
ஒரே மேடையில் 40 வேட்பாளர்கள்:
இந்த சூழலில், நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு வருகிறது. பிற கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வந்தபோது கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி அறிவித்தது. அதில் 10 பெண் வேட்பாளர்கள், 10 ஆண் வேட்பாளர்கள் என மொத்தம் 20 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கடந்த முறை 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இம்முறையும் அதேபோல் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதற்காக சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வரும் 23 ஆம் தேதி ஒரே மேடையில் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிகப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முக்கியமாக திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக தரப்பில் கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள், மதிமுகவிற்கு 1 இடமும், விசிகவிற்கு 2 இடங்கள் என கூட்டணி கட்சிகள் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுகிறது. இந்நிலையில் அதிமுக கட்சி தலைமையிலான கூட்டணியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்தே கூட்டணி பேச்சுவார்த்தை சற்று இழுபறியில் தான் உள்ளது. இன்று அதிமுக மற்றும் தேமுதிக இடையே கூட்டணி உறுதியாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
சூடுபிடிக்கும் அரசியல் களம்:
தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்காக பிரதமர் மோடி நடப்பாண்டில் மட்டும் 8 முறை தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதேபோல் பாஜக கூட்டணியில் பாமக, ஓபிஎஸ், தமாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளது. இப்படியான சூழலில் தேர்தல் களம் பரபரப்பு கண்டுள்ளது.