Kalaignar Centenary Library: “கலைஞர் நூற்றாண்டு நூலகம் - தமிழனாக பெருமைப்படுகிறேன்”: அமெரிக்காவிலிருந்து ட்வீட் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் !
Kalaignar Centenary Library: மதுரையில் மிக பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் கலைஞர் நூலகத்தை எண்ணி தமிழனாக பெருமையடைந்தேன் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மதுரையில் மிக பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் கலைஞர் நூலகத்தை எண்ணி தமிழனாக பெருமையடைந்தேன் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு சென்றுள்ள அன்பில் மகேஸ் சான் பிரான்சிஸ்கோ பொது நூலகத்தை பார்வையிட்ட பிறகு ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில், “ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பிரமாண்ட அறிவுக் கருவூலம் “கலைஞர் நூற்றாண்டு நூலகம்", வரும் ஜூலை 15ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பொது நூலகத்தை @SFPublicLibrary பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது!
140 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இந்நூலகத்தின் கீழ் 25க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு பருவத்தினருக்குமான நூல்களை வகைப்படுத்தி, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் நிர்வகித்து வருகின்றார்கள். நூலக நிர்வாகத்தினருடன் உரையாடியபோது, நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பிரமாண்டம் என் கண்முன் விரிந்தது! ஆம்... சான் பிரான்சிஸ்கோ பொது நூலகத்தை விடவும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப்பெரும் பரப்பளவில் - பிரமாண்டமாக - மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணி தமிழனாக பெருமையடைந்தேன். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்கப்படவுள்ள இலட்சக்கணக்கான புத்தகங்களின் வழியாக கலைஞர் என்றும் புகழப்படுவார்! உலகம் போற்றும் நூலகம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரையில் ஜூலை 15-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. #கலைஞர்100 .” என்று குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு மதுரை புதுநத்தம் சாலையில் மிகப் பெரிய நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி, -11ம் தேதி நூலகம் கட்டுமான பணிகள் தொடங்கின. தற்போது. ரூ.134 கோடியில் சுமார் 2,13,334 சதுர அடி பரப்பில் 7 தளங்களைக் கொண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன. பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் வாங்க சுமார் ரூ.10 கோடி, தொழில்நுட்ப உபகரணங்களுக்கென ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
முதல் பிரிவு கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம்,பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகம், சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-2, அறிவியல் உபகரணங்கள் பிரிவு அமைக்கிறது. 2-ம் தளத்தில் ( தமிழ் நூல்கள்பிரிவு (குறிப்பு உதவி நூல்கள் பிரிவு) மற்றும் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப் படத்துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவுகளும் இடம் பெறுகின்றன. 3-வது தளத்தில் ஆங்கில நூல்கள் , ஆராய்ச்சி இதழ்கள், தமிழ் நூல்கள் அடங்கிய பிரிவுகள் அமைக்கின்றன. 4-வது தளத்தில் (20,616) சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய போட்டித் தேர்வர்களுக்கான பல்வேறு துறை சார்ந்த நூல்கள் பிரிவு அமைக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள், உரை நூல்கள், திறனாய்வு நூல்கள், நவீன இலக்கியங்கள், பண்பாட்டு இலக்கியங்கள், உலகத் தமிழ் இலக்கியங்கள், நாடகம், மொழிபெயர்ப்பு நூல்கள், திராவிட இயக்க நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், அறிவியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், ஆங்கில இலக்கியங்கள் என லட்சக்கணக்கான நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட உள்ளன.