மேலும் அறிய
Advertisement
பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடிய மருத்துவர்கள்.! இறந்து பிறந்த குழந்தை..! உறவினர்கள் குற்றச்சாட்டு
சிதம்பரத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதால் குழந்தை இறந்து பிறந்ததாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குச்சூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பாரின் மனைவி இளவரசிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆயங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லை எனக்கூறி சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து இரவு 10 மணி அளவில் பிரசவ வலியுடன் இளவரசி சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த மருத்துவர்கள் இளவரசியை வந்து பார்த்துவிட்டு , தற்பொழுது உடல் நிலை சீராக உள்ளது சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்ப்பதாக கூறினர் என உறவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இரவு பணியில் இருந்த மருத்துவர் ஒருவருக்கு பிறந்த நாள் என்பதால், சக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 12 மணி அளவில் கேக் வெட்டி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பிறந்தநாளை கொண்டாடினர். இதனிடையே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசி வலியில் துடித்தார். பின் சென்று மருத்துவர்களிடம் உறவினர்கள் இளவரசி சிகிச்சை பார்க்குமாறு தெரிவித்துள்ளனர். அதற்கு மருத்துவர்கள் அலட்சியமாக பதில் கூறியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அதிகாலையில் 4 மணிக்கு இளவரசியை சோதித்து மருத்துவர்கள் சிசேரியன் செய்துள்ளனர். அப்போது தாயின் தொப்புள் கொடியில் சிக்கி குழந்தை உயிரிழந்தது. இதனால் குழந்தை இறந்தே பிறந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இளவரசியின் உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை இறந்ததாக குற்றம்சாட்டி மருத்துவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. பின் காலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளவரசியின் குடும்பத்தினரிடம் பேசி சமாதானம் செய்தனர், ஆனாலும் இளவரசியின் குடும்பத்தினர் அங்கிருந்து செல்ல மறுத்தனர் . பின் காவல்துறை விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை சார்பில் கூறுகையில், இளவரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரின் உடல்நிலை சீராகவே இருந்தது அதனால் சிறிது நேரத்தில் சுகப்பிரசவம் ஆவதற்கான வாய்ப்புகள் இருந்ததால் சிறிது நேரத்திற்குப் பின் வந்து கவனிப்பதாக கூறினோம். ஆனால் காலை வரையில் பிரசவம் ஆகாத நிலையில் காலை இளவரசிக்கு சிசேரியன் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது, ஆதலால் காலை 4 மணி அளவிற்கு இளவரசிக்கு சிசேரியன் செய்தபோது குழந்தை தாயின் தொப்புள் கொடியில் மாட்டி இறந்து பிறந்துள்ளது.
குழந்தை இறந்ததற்கும் மருத்துவர்கள் பிறந்தநாள் கொண்டாடியதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, ஆனாலும் இந்த சம்பவத்தை விசாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்து மருத்துவர்கள் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் மருத்துவர்கள் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியதால், அலட்சியத்தின் காரணமாக குழந்தை இறந்ததாக உறவினர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion