மகள் திருமணத்திற்கு அழைத்த ஊழியர்... மறுக்காமல் பறந்து வந்து திருமணத்தை நடத்தி வைத்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள்.!
தன் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரின் மகளின் திருமணத்திற்கு வந்தது மட்டுமின்றி, மணமகள் பணியாற்றிய பள்ளிக்கு நன்கொடை அளித்த சிங்கப்பூர் தொழிலதிபர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
![மகள் திருமணத்திற்கு அழைத்த ஊழியர்... மறுக்காமல் பறந்து வந்து திருமணத்தை நடத்தி வைத்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள்.! Ramanathapuram Singaporean businessmen who Conducted worker daughter Weddings - TNN மகள் திருமணத்திற்கு அழைத்த ஊழியர்... மறுக்காமல் பறந்து வந்து திருமணத்தை நடத்தி வைத்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள்.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/02/3f496633e531dc9f4aaf3b0a491940151709376995336113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வேலை தேடி வந்து இங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களைப் போல, நம் தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று, அங்கு கட்டுமான கம்பெனி முதல் சிறிய ஹோட்டல்கள் வரை வேலை பார்த்து பொருள் ஈட்டி பலரும் வாழ்ந்து வருகின்றனர். அதே வேளை நம்முடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தெரிந்து கொள்ள தமிழகத்திற்கு வருவதற்கு பல நாட்டினை சேர்ந்தவர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அவர்களுக்கு கீழ்பணி புரியும் ஊழியரோ, பணியாளரோ அவர்களின் இல்ல விழாவிற்கு அழைப்பு விடுத்தால் நம்மில் ஒருவராக நம்ம ஊர் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சிங்கப்பூர் போன்ற செல்வ செழிப்பு மிக்க நாடுகளிலிருந்து அந்நாட்டின் செல்வந்தர்கள் உள்ளக்கனிவோடு வருகை தருகிறார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு நம் நாட்டு கலாச்சார பாரம்பரிய முறைப்படி வரவேற்பு கொடுப்பதில் தமிழர்களுக்கு நிகர் யாரும் இல்லை என்பதை அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு நினைவு படுத்துகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் செந்துார்பாண்டியன் மகள் திருமண விழாவிற்கு வந்த சிங்கப்பூர் நிறுவன முதலாளி மற்றும் அதிகாரிகள், தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து அரசு பள்ளிக்கு நிதி உதவி வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அனைவரிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரின் மகள் திருமணத்திற்கு வருகை தந்து, மணமகள் வேலை பார்க்கும் அரசு பள்ளிக்கு ஒரு லட்சம் நிதி உதவி அளித்த சிங்கப்பூர் தொழில் அதிபர்களின் நல்ல மனதை முதுகுளத்தூர் பகுதி பொதுமக்கள் வாழ்த்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். இவர் நீண்ட காலமாக சிங்கப்பூரில் எல் கார்ப்பரேசன் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். செந்தூர்பாண்டியன் மகள் முகாவிஜிக்கும், கார்த்தி என்பவருக்கும் திருமணம் இன்று முதுகுளத்தூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு சிங்கப்பூரைச் சேர்ந்த எல் கார்ப்பரேசன் லிமிடெட் இயக்குனர் கூ லின், தொழில் இயக்குனர் ஹான் மிங், திட்ட மேலாளர் டிம் ஆகிய 3 பேரும் வருகை தந்திருந்தனர்.
திருமணத்திற்கு வந்த மூன்று பேரையும் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து குதிரை சாரட்டில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது செண்டை மேளம் முழங்க, சீர் வரிசை தட்டுகளுடன் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் திருமண மண்டபத்தில், தமிழர் முறைப்படி ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டனர். பின்னர் கூ லின் தாலி எடுத்து கொடுக்க, மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார். பின்னர் அவர்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வாழ்த்தினர்.
பின்னர், செந்தூர் பாண்டியன் மகள் முகாவிஜி தற்காலிகமாக பணியாற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்ற 3 பேருக்கும் பள்ளியின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் ஆரத்தி எடுத்தும், மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றியும், மலர் தூவியும் வரவேற்றனர்.
அப்போது பள்ளியின் வளர்ச்சிக்காக ஒரு லட்ச ரூபாய் நன்கொடை அளித்தனர். தன் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரின் மகளின் திருமணத்திற்கு வந்தது மட்டுமின்றி, மணமகள் பணியாற்றிய பள்ளிக்கு நன்கொடை அளித்த சிங்கப்பூர் தொழிலதிபர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)