கரூர் வழக்கறிஞர் சங்க தேர்தலை நடத்த கோரி நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்
தலைவர் மாரப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அடுத்த ஆண்டுக்கான வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது மரபாக உள்ளது.
கரூர் வழக்கறிஞர் சங்க தேர்தலை முறையாக நடத்த கோரி வழக்குரைஞர்கள் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக வழக்கறிஞர் மாரப்பன் செயல்பட்டு வருகிறார்.
தலைவர் மாரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அடுத்த ஆண்டுக்கான வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது மரபாக உள்ளது.
மாறாக , தற்போது தலைவராக உள்ள, மாரப்பன் தலைமையிலான நிர்வாகிகள், பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தற்போதைய நிர்வாகிகளே 2023-2024-ம் ஆண்டிற்கான கரூர் வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகளாக தொடரவேண்டும் என்று ஆதரவு தெரிவித்ததின் பேரில் தற்போதைய நிர்வாகிகள் 2023-2024-ம் ஆண்டிற்கான கரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கு வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர்கள் சிலர் சங்க விதிப்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என அந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், தற்போதைய நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறிவிட்டு கூட்டத்தை முடித்துவிட்டு தீர்மான நோட்டை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களிலும், கரூர் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகளாக தற்போதுள்ள நிர்வாகிகளே அடுத்த ஆண்டுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என பதிவிட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் சிலர், நீதிமன்றம் முன்பு திரண்டு தற்போதைய சங்க நிர்வாகிகளின் நடவடிக்கையை கண்டித்து முழக்கம் எழுப்பினர். முறையாக சங்க விதிமுறைப்படி தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.