(Source: ECI/ABP News/ABP Majha)
’மிக மிக அவசரம்’ படம் ஓடியதைவிட, முதல்வரின் அறிவிப்பால் பெருமை கொள்கிறேன் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
முதல்வரின் பயணத்தின்போது சாலைப் பாதுகாப்பு பணியில் பெண் போலீசார் ஈடுபடக்கூடாது என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவிற்கு திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் `மிக மிக அவசரம்' படத்தை எடுத்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
முதல்வர், அமைச்சர்கள் ஆகியோரின் சுற்றுப்பயணங்கள் மற்றும் ஆய்வுப்பணிகளின்போது அவர்களின் பாதுகாப்பிற்காக சாலைகள் மற்றும் அவர்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது போலீசார் ஈடுபடுவது அவர்களின் தலையாய கடமை. இதுபோன்ற பாதுகாப்பு பணியின்போது பெண் போலீசாரும் பெரும்பாலான நேரங்களில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. மாதவிடாய் உள்ளிட்ட பல நெருக்கடியான தருணத்திலும் பெண் போலீசார் இதுபோன்ற சாலைகளின் ஓரத்திலே நிற்பதால் அவர்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பு பணியில் இனி பெண் போலீசார் ஈடுபடுத்தக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ் காமாட்சி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பெண் போலீசாரின் பெருந்துன்பங்களில் ஒன்று பிரபலங்கள் வரும்போது பாதுகாப்பிற்காக சாலைகளில் நிற்பது... அதிலென்ன இருக்கிறது என சாதாரணமாகக் கடந்து போகும்போது... ஒரு சின்ன சிக்கல் எவ்வளவு பெரிய வலியையும் அவஸ்தையையும் தருகிறது என்பதை `மிக மிக அவசரம்’ படத்தில் சொல்லியிருந்தோம்.
ரொம்ப சின்ன கதைக்கருதான். ஆனால் அதன் பின்னிருந்த அழுத்தமான வலி பெருவெற்றியைத் தந்தது. திரையரங்கில் ஓடியதைவிட, இன்று இந்த அறிவிப்பால் உண்மையாகவே பெருமை கொள்கிறேன். மகிழ்கிறேன். பெண் போலீசார் சாலையோர பாதுகாப்பில் ஈடுபட வேண்டாம் என அறிவித்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுகும், டி.ஜி.பி.க்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படைப்பிற்கு கதை எழுதிய இயக்குநர் ஜெகன்னாத், நடித்த பிரியங்கா, அரீஷ் குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இயக்குநர் சீமான், இயக்குநர் சேரன், மற்றும் படத்தை வெளியிட்ட லிப்ரா ரவீந்தர் சந்திர சேகரன், இணைந்து தயாரித்த குங்ஃபூ ஆறுமுகம், ஒளிப்பதிவாளர் பாலபரணி, எடிட்டர் சுதர்சன், இசையமைப்பாளர் இஷான் தேவ், பி. ஆர். ஓ. ஜான் அனைவருக்கும் நன்றிகள்.
படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் "மிக மிக அவசரம்" படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
மிகமிக அவசரம் திரைப்படத்தில் சாலைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஒரு பெண் போலீசின் சிரமத்தையும், மன உளைச்சலையும் யதார்த்தமாக பதிவு செய்திருப்பார்கள். இதற்காக இந்த படத்தை போலீசார் உள்பட பலரும் பாராட்டினர். சிம்பு நடித்து வரும் மாநாடு திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிதான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?