Pmk Manadu: விவசாய மாநாடு ட்ரைலர்.. பெரிய மாநாட்டுக்கு தயாராகும் பாமக .. அன்புமணியின் பிளான் என்ன ?
PMK Manadu: பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நாளை திருவண்ணாமலையில் விவசாய மாநாடு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய கட்சிகளில் ஒன்றாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருகிறது. 1987 இடஒதுக்கீடு போராட்டத்திற்குப் பிறகு பாமக உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 21 நபர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அதன் பிறகே பாமக என்ற கட்சி தொடங்கப்பட்டது, அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு தேர்தலில் பாமக போட்டியிட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு தேர்தல் வரை பாமக போட்டியிட்ட தேர்தல்களில், மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வந்தது. அதன் பிறகு பாமக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
அரசியல் கட்சியை பொறுத்த வரை தேர்தல்களில் தோல்விகள் இருந்தாலும், ஒவ்வொரு கட்சியும் தங்களது அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள, பல்வேறு அணுகுமுறையை கையில் எடுப்பார்கள். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும், மாநாடுகள் மூலம் கட்சியின் கட்டமைப்பை உயிர்ப்புடன் வைப்பது மட்டுமின்றி, மக்களின் கவனத்தையும் பாமகவின் மாநாடுகள் பெரும்.
கவனத்தைப் பெற்ற வண்டலூர் மாநாடு
ஆண்டுதோறும் வன்னியர் சங்கம் மற்றும் பாமக இணைந்து மாநாடுகளை நடத்தி வந்தன. அதன் பிறகு பாட்டாளி மக்கள் கட்சி தனது பாதையை மாற்றத் தொடங்கி, அன்புமணியை முன்னிலைப்படுத்தி கட்சியை வளர்க்கத் தொடங்கினர். அதன் பிறகு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக 2016-இல் வண்டலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது. பிற மாநாடுகளை விட தொழில்நுட்ப ரீதியாக, வண்டலூர் மாநாடு மக்களின் கவனத்தை பெற்றது. 2017 ஆம் ஆண்டு கடைசியாக பாட்டாளி மக்கள் கட்சி 'சமூக நீதி மாநாட்டை ' நடத்தி இருந்தது. அதன் பிறகு எந்த மாநாடுகளை பாமக நடத்தாமலே இருந்து வருகிறது.
இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதான கட்சிகளாக திமுக (இளைஞரணி மாநாடு), அதிமுக சார்பில் மதுரையில் மாநாடு, விசிக சார்பில் இரண்டு மாநாடுகள், புதியதாக கட்சி தொடங்கிய விஜய் தனது கட்சியின் முதல் மாநாடு ஆகியவற்றை நடத்தி முடித்துள்ளனர். இதனால் பாமகவும் தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்கவும், தனது நிர்வாகிகளை உயர்ப்புடன் வைத்துக் கொள்ளவும் பெரிய அளவில் மாநாட்டை நடத்த திட்டம் திட்டி வருகிறது.
விவசாயிகள் மாநாடு
பாமகவின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் டிசம்பர் 21 இல் மாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி மற்றும் பல்வேறு உழவர் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உரை நிகழ்த்துகின்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு மாநாடு
விவசாய மாநாட்டை ஒரு டிரைவராகவே, பாமக நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாய மாநாடு நடத்திய பிறகு விரைவில், பாமகவின் பிரதான கோரிக்கையாக இருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், என பெரிய மாநாடு ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 ஆண்டுகள் கழித்து பாமக சார்பில் நடத்தப்பட உள்ளதால், அந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதற்காகவே நிர்வாகிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? எந்தெந்த மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள்? யார் யார் கொடுத்த பொறுப்புகளை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொண்டு மதிப்பீடு செய்வதற்காகவே, இந்த விவசாய மாநாடு நடைபெறுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கணக்கெடுக்க தனிக்குழு
நாளை மாநாட்டிற்கு திருவண்ணாமலை நகரில் உள்ள 9 நுழை நுழைவுச்சாலைகளில் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து எத்தனை வண்டிகள் வருகிறது, எவ்வளவு நபர்கள் வருகிறார்கள் என்பதை கண்டறிய அனைத்து பாதைகளிலும் ஆட்களை வைத்து பாமகவின் தலைமை நிர்வாக குழு கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளது.
இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது? என்பது குறித்து மதிப்பீடு செய்யவும் பாமக திட்டம் தீட்டி உள்ளதாம். சிறப்பாக செயல்படாத நிர்வாகிகள் மீது, நடவடிக்கைக் கூட பாயலாம் என்கிறார்கள் தலைமை நிர்வாகிகள். விவசாய மாநாட்டை டிரைலராக நடத்தி, தவறுகளை திருத்தி கட்சி மாநாட்டிற்கு பாமக தயாராகி வருகிறது. பாமகவின் விவசாய மாநாடு அரசியல் பரபரப்பை ஏற்படுத்துமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.